பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தின நிகழ்ச்சியில் 4,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என ஏடிஜிபி ஜெயந்த் முரளி தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் நாளை (செப்.11) அனுசரிக்கப்படுகிறது.
கரோனா ஊடரங்கை முன்னிட்டு 144 தடையுத்தரவு அமலில் உள்ளதால் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும், ஊர்வலமாக வரவும் அரசு அனுமதிக்கவில்லை. பதிவு பெற்ற அரசியல் கட்சிகள் மட்டும் ஆட்சியரிடம் அனுமதி பெற்று 5 பேருடன் வந்து மரியாதை செலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வை முன்னிட்டு பரமக்குடியில் ஏடிஜிபி சட்டம் ஒழுங்கு ஜெயந்த் முரளி தலைமையில் தென்மண்டல ஐஜி முருகன், டிஐஜிக்கள் மயில்வாகனன் (ராமநாதபுரம்), பிரதீப்குமார்(சேலம்), ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் உள்ளிட்ட 8 காவல் கண்காணிப்பாளர்கள், 8 கூடுதல் எஸ்பிக்கள், 14 டிஎஸ்பிக்கள் உள்ளிட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
பரமக்குடியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி, ஐஜி முருகன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அதனையடுத்து ஐந்துமனைப்பகுதியில் உள்ள தனியார் மஹாலில் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.
பின்னர் ஏடிஜிபி ஜெயந்த் முரளி செய்தியாளர்களிடம் கூறும்போது, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 4000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஆட்சியரிடம் அனுமதி பெற்ற அரசியல் கட்சியினர் மட்டுமே அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவர் கரோனா ஊரடங்கு உள்ளதால் அதை மீறி வருபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என தெரிவித்தார்.
அதனையடுத்து கூட்டத்தை கண்காணிக்கவும், சட்டம் ஒழுங்கு பிரச்சினை, சமூக விரோதச் செயல்களில் யாரேனும் ஈடுபட்டாலும் அதை கண்டறியும் வகையில் பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் ஆளில்லாத உளவு விமானத்தை ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் பறக்கவிட்டு ஆய்வு செய்தார்.