மின்வாரியப் பணியில் சேர்ந்து 2 ஆண்டில் தமிழ் தேர்வில் வெற்றிப்பெறாத ஊழியருக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கி, அதில் வெற்றி பெறாவிட்டால் பணியிலிருந்து நீக்கலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேனி டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் எம்.ஜெய்குமார். இவர் தேனி மின் பகிர்மான வட்டத்தில் 2018-ல் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தார்.
இவர் பள்ளியில் தமிழ் வழியில் கல்வி பயிலாததால், பணியில் சேர்ந்து 2 ஆண்டிற்குள் டிஎன்பிஎஸ்சி நடத்தும் தமிழ் மொழித் தேர்வில் வெற்றிப்பெற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.
இந்த நிபந்தனைபடி தமிழ் மொழித் தேர்வில் வெற்றிப்பெறாததால் ஜெய்குமாரை பணிலிருந்து விடுவித்து கண்காணிப்பு பொறியாளர் 16.6.2020-ல் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்து தன்னை மீண்டும் பணியில் சேர்த்து பணப்பலன்களை வழங்க உத்தரவிக்கோரி ஜெய்குமார் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பிறப்பித்த உத்தரவு:
டிஎன்பிஎஸ்சி ஒவ்வொரு ஆண்டும் 2 முறை மொழித் தேர்வு நடத்துகிறது. மனுதாரர் பணியில் சேர்ந்த 2 ஆண்டு காலத்தில் 3 முறை மொழித் தேர்வு நடத்தப்பட்டுள்ளது.
மனுதாரர் இந்தாண்டு ஜனவரியில் நடத்தப்பட்ட மொழித்தேர்வில் பங்கேற்று தோல்வியடைந்துள்ளார். பணியில் சேர்ந்து 2 ஆண்டில் மொழித்தேர்வில் வெற்றிப்பெறாவிட்டால் அவர் பணியிலிருந்து விடுவிக்கப்படுவார் என மின்வாரிய விதியில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இந்த விதி அனைவருக்கும் கட்டாயமானதாகும்.
மனுதாரர் தன்னை தமிழன் என்றும், தாய் மொழி தமிழ் என்றும் கூறியுள்ளார். ஆனால் அவரால் தமிழ் தேர்வில் வெற்றிப்பெற முடியவில்லை. அவருக்கு தமிழ் பேச மட்டும் தெரிந்தால் போதாது, படிக்கவும், எழுதவும் தெரிய வேண்டும்.
தமிழகத்தில் அலுவல் மொழி தமிழ், அரசின் அனைத்து நடவடிக்கைகளும் தமிழில் தான் நடைபெறுகிறது. மின்வாரியத்திலும் அப்படியே. இதனால் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது தவறு என்று சொல்ல முடியாது. தான் பணியில் நீடிக்க மொழித் தேர்வில் வெற்றிப்பெறுவது கட்டாயம் எனத் தெரிந்தும் மனுதாரர் அதில் ஆர்வம் இல்லாமல் இருந்துள்ளார்.
ஒரு நிபந்தனைக்கு ஒத்துக்கொண்டு பணியில் சேர்ந்த பிறகு அதிலிருந்து தப்பிக்க முடியாது. மனுதாரர் விழிப்புடன் செயல்பட்டு 2 ஆண்டிற்குள் மொழித்தேர்வில் வெற்றிப்பெற்றிருக்க வேண்டும். எனவே மின்வாரியத்தின் நடவடிக்கை தவறல்ல.
இருப்பினும் மனுதாரரை பணியிலிருந்து நீக்கினால் அவரது எதிர்காலம் பாதிக்கப்படும். அவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கலாம். டிஎன்பிஎஸ்சி அடுத்து நடத்தும் மொழித் தேர்வில் அவர் பங்கேற்க வேண்டும். அதில் தோல்வி அடைந்தால் அவரை பணி நீக்கம் செய்யலாம். எனவே மனுதாரருக்கு டிஎன்பிஎஸ்சி அடுத்து நடத்தும் மொழித்தேர்வு வரை பணி நீட்டிப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.