தமிழகம்

மதுரையில் மாட்டுத்தாவணி, திருப்பாலை புதிய காவல் நிலையங்களுக்கான அரசாணை வெளியீடு- விரைவில் கட்டுமானப் பணி தொடங்க நடவடிக்கை

என்.சன்னாசி

மதுரை மாட்டுத்தாவணி, திருப்பாலை புதிய காவல் நிலையங்களுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகளை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா தெரிவித்தார்.

மதுரை நகரில் தற்போது 4 மகளிர் உட்பட 26 காவல் நிலையங்கள் செயல்படுகின்றன. இவற்றில் கடைசியாக உருவாக்கப்பட்ட காவல் உயர் நீதிமன்றம் மதுரை கிளை காவல் நிலையம். நகரில் மக்கள் தொகை அதிகரிப்பு, எல்லை விரிவாக்கம் போன்ற பல காரணத்தால் நிர்வாக ரீதியாக கூடுதல் காவல் நிலையங்களும் தேவை ஏற்படுகிறது.

இதன்படி, காவல் நிலைய எல்லை விரிவாக்கத்தை பொறுத்தவரை அண்ணாநகர், தல்லாகுளம், செல்லூர் போன்ற காவல் நிலையங்களை இரண்டாக பிரித்து, புதிய காவல் நிலையங்கள் உருவாக்க நகர் காவல்துறை நிர்வாகம் முயற்சி மேற்கொண்டது. இதற்கான அறிக்கையை டிஜிபிக்கு அனுப்பினர்.

இந்நிலையில், அண்ணாநகர் காவல் நிலையத்தை இரண்டாக பிரித்து மாட்டுத்தாவணியிலும், தல்லாகுளத்தை பிரித்து திருப்பாலை பகுதியிலும் புதிய காவல் நிலையங்களை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்கும் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நகர் காவல்துறை அதிகாரிகள் புதிய காவல் நிலையங்களுக்கான அமைவிடங்களை தேர்வு செய்து, அரசுக்கு அறிக்கை சமர்பித்தனர்.

அதற்கான நிதி ஒதுக்கீடு, அதிகாரிகள், காவலர்கள் நியமனத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மிதவகையான (மீடியம்) இரு காவல் நிலையங்களும் சுமார் ரூ.3.86 கோடியில் கட்டப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாட்டுத்தாவணி காவல் நிலையத்தில் சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவுக்கென தனித்தனி ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், தலைமைக் காவலர்கள், கிரேடு-1,2 காவலர்கள் என, 51 பேரும், திருப்பாலை புதிய காவல் நிலையத்தில் ஒரு காவல் ஆய்வாளர், 3 காவல் உதவி ஆய்வாளர்கள், தலா 5 தலைமைக் காவலர்கள், கிரேடு-1 காவலர்கள், 36 கிரேடு-2 காவ லர்கள் என, 50 பேரும் நியமிக்க அரசாணையில் குறிப்பிடப் பட்டுள்ளது. இருகாவல் நிலையங்களுக்கான கட்டுமான பணி விரைவில் துவங்க உள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

காவல் ஆணையரிடம் கேட்டபோது, ‘‘இரு காவல் நிலையங்களுக்கான நிதி ஒதுக்கீடு, அதிகாரிகள், காவலர்கள் நியமனம் குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளோம். துரிதமாக கட்டுமானப் பணி துவங்குவது பற்றி ஏற்பாடு செய்யப்படும்,’’ என்றார்.

SCROLL FOR NEXT