தமிழகம்

மதுரை திருமலை நாயக்கர் மகால் எப்போது திறக்கப்படும்?தொல்லியல்துறை அனுமதி வழங்காததால் சிக்கல்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

தொல்லியல்துறை அனுமதி வழங்காததால் தற்போது வரை மதுரை திருமலை நாயக்கர் மகால் சுற்றுலாப்பயணிகள் வருகைக்காக திறக்கப்படவில்லை.

தென் தமிழகத்தில் மதுரை முக்கிய ஆன்மீக ஸ்தலமாகவும், சுற்றுலாத்தலமாகவும் திகழ்கிறது. இதில், பார்ப்போர் வியக்கும் கட்டிடக்கலையும், பாரம்பரியத்தையும் கொண்ட மதுரை திருமலை நாயக்கர் முக்கியமானது.

உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் மட்டுமில்லாது பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அதிகளவு திருமலைநாயக்கர் மகாலை சுற்றிப்பார்க்க வருவார்கள்.

கரோனா தொற்றால் சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டதால் திருமலை நாயக்கர் மகாலும் மூடப்பட்டது. தற்போது ஒரளவு கரோனா தொற்று கட்டுக்குள் வந்ததால் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிந்து வருதல் உள்ளிட்ட சிறப்பு கட்டுப்பாடுகளுடன் சுற்றுலா ஸ்தலங்களை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. கொடைக்கானல் இன்று திறக்கப்படுகிறது.

மதுரை சுற்றுலாத் தலங்கள் ஏற்கெனவே சுற்றுலாப்பயணிகள் வருகைக்காக திறக்கப்பட்டன. ஆனால், திருமலை நாயக்கர் மகால் மட்டும் தற்போது வரை திறக்கப்படவில்லை. ஏற்கணவே சுற்றுலாப்பயணிகள் கரோனா தொற்று அசு்சறுத்தல், பொருளாதார பின்னடைவுகளால் சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

ஆனால், திறக்க அனுமதி வழங்கப்பட்டும் பிரசித்திப்பெற்ற திருமலை நாயக்கர் மகால் தற்போது வரை திறக்கப்படவில்லை.அதனால், மீனாட்சியம்மன் வரும் சுற்றுலாப்பயணிகள் மகாலை பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து சுற்றுலாத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தொல்லியல்துறை தற்போது வரை திருமலை நாயக்கர் மகாலை திறக்க அனுமதி வழங்கவில்லை. ஒரிரு நாளில் திறக்க அனுமதி வழங்கப்படலாம். வரும் 1ம் தேதி முதல் திருமலை நாயக்கர் மகால் திறக்க வாய்ப்புள்ளது, ’’ என்றார்.

SCROLL FOR NEXT