திண்டுக்கல் மார்க்கெட்டில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தக்காளி. 
தமிழகம்

தொடர் மழையால் அதிகரிக்கும் காய்கறிகள் விலை : அரைசதமடித்த சின்னவெங்காயம், தக்காளி   

பி.டி.ரவிச்சந்திரன்

தொடர் மழை காரணமாக காய்கறிகளின் விலை படிப்படியாக அதிகரித்துவருகிறது. வரத்து குறைந்து வருவதால் தக்காளி, வெங்காயத்தின் விலை அரை சதத்தைக் கடந்தது.

திண்டுக்கல் மாவட்டத்தில் பழநி, ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி, கள்ளிமந்தயம், வேடசந்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் பல்வேறு காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது.

இவை அனைத்தும் தமிழகத்தின் பெரிய மார்க்கெட்களில் ஒன்றான காந்திகாய்கறி மார்க்கெட்டிற்கு விவசாயிகள் கொண்டுவந்து மொத்தமாக விற்பனை செய்கின்றனர். இங்கிருந்து கேரளா மற்றும் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு விற்பனைக்கு கொண்டுசெல்லப்படுகிறது.

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை அதிகம் பெய்துவருகிறது. இதனால் விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள காய்கறிகள் சேதத்திற்குள்ளாகிவருகிறது.

இதனால் செடியில் காய்கறிகள் சேதமடைந்துவருகிறது. மழையால் தக்காளிபழங்கள் செடியில் உடைந்துவிடுகிறது. மேலும் ஈரப்பதம் அதிகரிப்பால் அதிகம் சேதமடைகிறது.

இதனால் தரமான தக்காளிகள் வரத்து குறையத்தொடங்கியுள்ளது. கடந்த ஒரு வாரமாக தக்காளி விலை படிப்படியாக உயரத்தொடங்கியுள்ளது. நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.50 க்கு விற்பனையாகியது. வரத்து தொடர்ந்து குறைவால் விரைவில் ஒரு கிலோ ரூ.60 யை கடந்து விற்பனையாகும் என்கின்றனர் வியாபாரிகள்.

இதேபோல் சின்னவெங்காயமும் மழைகாலம் என்பதால் அதிக ஈரப்பதத்தால் பாதிப்புக்குள்ளாகும்நிலையில் வரத்து இல்லாததால் இருப்பு வைத்திருக்கும் வெங்காயங்கள் விற்பனைக்கு வரத்தொடங்கியுள்ளன. தேவை அதிகரிப்பால் சின்னவெங்காயம் விலை ஒரு கிலோ ரூ.50 யை கடந்து விற்பனையாகிறது.

காய்கறிகளின் விலை நிலவரம் (ஒரு கிலோ): கத்தரிகாய் ரூ.38, வெண்டைக்காய் ரூ.30, அவரை ரூ.44, முருங்கைக்காய் ரூ.40, பெரியவெங்காயம் ரூ.30, புடலங்காய் ரூ.20, பச்சைமிளகாய் ரூ.44, முட்டைக்கோஸ் ரூ.26, கேரட் ரூ.52, பீட்ரூட் ரூ.30 என அனைத்து காய்கறிகளும் படிப்படியாக உயர்ந்துவருகிறது. மழை காலம் முடியும் வரை தேவைக்கேற்ப காய்கறிகள் வரத்து இருக்காது என்பதால் அனைத்து காய்கறிகளின் விலையும் கணிசமாக உயரும். மேலும் தக்காளி, சின்னவெங்காயம் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்கின்றனர் வியாபாரிகள்.

SCROLL FOR NEXT