திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்துக்குள் வரும் பயணியின் வெப்பநிலையைக் கணினி திரையில் பார்வையிடும் ரயில்வே ஊழியர். | படம்: ஜி.ஞானவேல்முருகன். 
தமிழகம்

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் தானியங்கி வெப்பமானி மூலம் பரிசோதனை: 37.5 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பம் இருந்தால் அனுமதியில்லை

ஜெ.ஞானசேகர்

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் தானியங்கி வெப்பமானி மூலம் பயணிகளைப் பரிசோதிக்கும் நடைமுறை இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையமும் ஒன்று. 8 நடைமேடைகள் கொண்ட இங்கு, ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு 8-வது நடைமேடை வழியாக சரக்கு ரயில்களும், 1 முதல் 3 வரையிலான நடைமேடைகள் வழியாக பயணிகள் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் செப்.7 முதல் ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ள நிலையில், திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் வழியாக 13-க்கும் அதிகமான சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் தற்போது பிரதான நுழைவுவாயில் வழியாக மட்டுமே பயணிகள் உள்ளே செல்லவும், வெளியே வரவும் அனுமதிக்கப்படுகிறது.

ரயில் போக்குவரத்து தொடங்கிய செப்.7-ம் தேதி முதல் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் அனைவரும் ரயில்வே ஊழியர் மூலம் வெப்பமானியால் பரிசோதனை செய்யப்பட்டு, காய்ச்சல் அறிகுறி இல்லையென்றால் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர். இதில், நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டதையடுத்து, இன்று (செப். 10) முதல் தானியங்கி வெப்பமானி மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இது தொடர்பாக ரயில்வே அலுவலர்கள் கூறுகையில், "ரயில்வேயின் சிக்னல் பிரிவு மூலம் தானியங்கி வெப்பமானி அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக பரிசோதனை முறையில் செயல்படுத்தப்பட்ட நிலையில், இன்று முதல் முழு பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. தனிமனித இடைவெளியுடன் வரிசையாக ரயில் நிலையத்துக்குள் நுழையும் ஒவ்வொரு பயணியின் உடலின் வெப்பநிலையையும் தானியங்கி வெப்பமானி மிகவும் நுட்பமாகக் கணக்கிடுகிறது.

ஒவ்வொரு பயணியின் உடலின் வெப்பநிலையைக் கணினி திரை மூலம் ரயில்வே ஊழியர்கள் கண்காணிக்கின்றனர். அதேபோல், பயணிகளும் தெரிந்துகொள்ள டிஸ்பிளே வசதி அமைக்கப்பட்டுள்ளது.

மனித உடலின் சராசரி வெப்ப நிலை 36.5 டிகிரி செல்சியஸ் முதல் 37.5 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம். எனவே, 37.5 டிகிரி செல்சியஸ் மற்றும் அதற்கு அதிகமாக உடல் வெப்பநிலை உள்ள பயணிகள் ரயில் நிலையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. மேலும், அவர்கள் விரும்பினால் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கரோனா பரவலைத் தடுக்கும் நோக்கிலேயே இந்த தானியங்கி வெப்பமானி அமைக்கப்பட்டுள்ளது" என்றனர்.

SCROLL FOR NEXT