கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 100 வயது மூதாட்டி தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.
தென்காசி மாவட்டம், செங்கோட்டையைச் சேர்ந்த இசக்கியம்மாள் (100) என்பவருக்கு, கடந்த சில நாட்களுக்கு முன்பு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, சிடி ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது. அதில், நுரையீரல் பாதிப்பின் மூலம் இசக்கியம்மாளுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் சேக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். தொடர் சிகிச்சையால் இசக்கியம்மாள் பூரண குணமடைந்தார். இதையடுத்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.
இதுகுறித்து தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் கூறும்போது, ‘‘சளி பரிசோதனையில் இசக்கியம்மாளுக்கு கரோனா நெகட்டிவ் வந்தது.
ஆனால், சிடி ஸ்கேன் எடுத்து பார்த்தபோது, நுரையீரல் பாதிக்கப்பட்டு கரோனா தொற்று பாதிப்பு இருந்தது தெரியவந்தது. நுரையீரல் 40 சதவீதம் பாதிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆக்ஸிஜன் தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு, தொடர் சிகிச்சையால் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு, கரோனா தொற்றில் இருந்து குணமடைந்ததைத் தொடர்ந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
சளி பரிசோதனை மூலம் கரோனா தொற்று உள்ளதா என்பதை 80 சதவீதம் தான் உறுதி செய்ய முடியும். தொண்டையில் உள்ள சளியில் கிருமி இல்லாவிட்டால் கரோனா தொற்று இல்லை என்றே பரிசோதனை முடிவு காட்டும். சளி பரிசோதனையில் கரோனா நெகட்டிவ் வந்து, சிடி ஸ்கேன் பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பதும் சிலருக்கு கண்டறியப்பட்டுள்ளது.
தென்காசி அரசு மருத்துவமனையிலேயே 20 பேர் இவ்வாறு சிடி ஸ்கேன் மூலம் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவ்வாறு சளி பரிசோதனையில் கரோனா தொற்று இல்லாத இசக்கியம்மாளுக்கு, சிடி ஸ்கேன் மூலம் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தீவிர சிகிச்சைக்குப் பின் குணமடைந்துள்ளார்.
எனவே, மூச்சுத் திணறல் அறிகுறி இருந்தால் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். தொற்று அதிகமானால் நுரையீரல் பாதிக்கப்பட்டு, உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது” என்றார்.