துரைமுருகன்: கோப்புப்படம் 
தமிழகம்

ஸ்டாலினா, துரைமுருகனா, கருணாநிதியா என்பதல்ல; இது இயக்கம்: துரைமுருகன் பேட்டி

செய்திப்பிரிவு

தலைவருக்கு உறுதுணையாக இருந்து கட்சிக்காக பாடுபடுவது ஒவ்வொரு திமுகவினரின் கடமை என, அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

க.அன்பழகனின் மறைவுக்குப் பிறகு திமுக பொதுச் செயலாளர் பதவி காலியாக இருந்தது. இதையடுத்து, கரோனா ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்ட திமுக பொதுக்குழு நேற்று (செப். 9) காணொலி காட்சி வாயிலாக கூடியது. இதில், திமுக பொதுச் செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும், துணைப் பொதுச் செயலாளர்களாக க.பொன்முடி, ஆ.ராசா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று (செப். 10) சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள தனது இல்லத்தின் முன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது தனக்கு பொறுப்புகள் அதிகமாகியிருக்கிறது எனவும், தான் இதுவரை கட்சியிலிருந்து பெற்ற பயிற்சியை வைத்து இந்த பொறுப்பை சமாளிப்பேன் எனவும், தெரிவித்தார்.

இதையடுத்து, அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

மு.க.ஸ்டாலின் உங்களை பாராட்டியதை எப்படி பார்க்கிறீர்கள்?

மனதார வரவேற்கிறேன்.

சட்டப்பேரவையில் இனி உங்களின் செயல்பாடு எப்படி இருக்கும்?

கருணாநிதி தலைவரான பிறகு கூட அவரது குரல் சட்டப்பேரவையில் ஓங்கி ஒலித்தது. அவர் வழியில் தான் நான் நடப்பேன்.

ஸ்டாலினுக்கு நீங்கள் எப்படி உறுதுணையாக இருப்பீர்கள்?

ஸ்டாலினா, துரைமுருகனா, கருணாநிதியா என்பதல்ல. இது இயக்கம். இந்த இயக்கத்திற்கு தலைவர் வழிநடத்துகிறார். தலைவருக்கு உறுதுணையாக இருந்து கட்சிக்காக பாடுபடுவது ஒவ்வொரு திமுகவினரின் கடமை.

கலாச்சார போராட்டத்திற்கு தயாராக வேண்டும் என தெரிவித்திருந்தீர்கள்? அதற்கு திமுக எப்படி தயாராக போகிறது?

இப்போதுதான் வந்திருக்கிறேன். ஒவ்வொன்றாக செய்ய வேண்டும்.

இவ்வாறு துரைமுருகன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT