வாழ்க்கை முழுவதும் மாணவர்கள் படிப்பதை தொடர வேண்டும் என்று விஐடி பல்கலைக்கழக தின விழாவில் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.விமலா தெரிவித்தார்.
வேலூர் விஐடி பல்கலைக்கழக தின விழா ஆன்லைன் வழியாக நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.விமலா சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
ஆன்லைன் வழியாக அவர் பேசும்போது, ‘‘வாழ்க்கை முழுவதும் மாணவர்கள் படிப்பதை தொடர வேண்டும். வாழ்க்கையில் மேன்மையடைய மாணவர்களுக்கு படிப்பு உதவும். படிப்புடன் செய்முறை பயிற்சியும் அறிவும் வாழ்வில் தன்னம்பிக்கை மற்றும் தொழில் முனைவோராக வருவதற்கு மாணவர்களுக்கு உதவும்’’ என்றார்.
நிகழ்ச்சியில், விஐடி பல்கலைக்கழக உதவி துணைத் தலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதன் பேசும்போது, ‘‘தற்போதுள்ள சூழ்நிலையில் டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாடு, வேலை மற்றும் தனிப்பட்ட தொடர்புகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. தொழில்நுட்பத்தில் நாம் முன்னோடியாக இருப்பதால் அதன் வாயிலாக வரும் சவால்கள், அச்சுறுத்தல்களை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.
தொழில்நுட்பம் மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் வகையில் நாம் உருவாக்க வேண்டும். இந்த டிஜிட்டல் உலகில் அனைவருக்கும் பாதுகாப்பான சூழலை நாம் உருவாக்கிட வேண்டும்’’ என்றார்.
விஐடி துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன், வேந்தர் தங்கப்பதக்கம் பெறும் மாணவர்கள் மற்றும் பல்வேறு துறையில் சாதனை படைத்த மாணவர்களின் விருது பட்டியலை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், விஐடி துணை வேந்தர் ஆனந்த் ஏ.சாமுவேல், இணை துணை வேந்தர் எஸ்.நாராயணன், பதிவாளர் கே.சத்தியநாராயணன் பங்கேற்றனர்.