தமிழகம்

பாஜக-வுடன் ஒருபோதும் திமுக கூட்டணி வைக்காது: ஆ.ராசா திட்டவட்டம்

செய்திப்பிரிவு

பாஜக-வுடன் ஒருபோதும் திமுக கூட்டணி வைக்காது என முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக துணைப் பொதுச் செயலாளராக நேற்று தேர்வு செய்யப்பட்டவருமான ஆ.ராசா தெரிவித்தார்.

திமுக பொதுக்குழு கூட்டம் காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது. பெரம்பலூரில் இருந்தவாறு இக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஆ.ராசா, கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வரும் தேர்தலில் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம் என்பது குறித்து தேர்தல் நேரத்தில், நிர்வாகிகளுடன் கலந்துபேசி தலைமைக் கழகம் அறிவிக்கும்.

பாஜக-வுடன் ஒருபோதும் திமுக கூட்டணி வைக்காது. இந்தியாவில் காவிச் சாயம் பூசுவதற்கு பல கட்சிகள் ஒத்துழைத்தபோதும், அதை ஏற்காமல் எதிர்த்துக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிற, கொடுக்கப் போகிறவர் திமுக தலைவர் ஸ்டாலின். அவர் ஒருபோதும் பாஜகவுடனான கூட்டணியை ஏற்க மாட்டார்.

மும்மொழிக் கொள்கை குறித்து வரும் கூட்டத்தொடரில் திமுக நாடாளுமன்றக் குழுத் துணைத் தலைவர் கனிமொழி பேசுவார். ஸ்டாலின், மற்ற மாநிலத் தலைவர்களுடன் பேசி இதற்கான பூர்வாங்க திட்டத்தையும் வகுத்துள்ளார் என்று கூறினார்.

SCROLL FOR NEXT