கரோனா தடுப்புப் பணிகளில் புதுச்சேரி அரசு - ஆளுநர் இடையில் ஒருங்கிணைப்பு இல்லாததால் மக்கள் தவித்து வருகின்றனர். நோய் தொற்று உள்ள ஒரு அசாதாரணமான சூழலிலும் இரு தரப்பிலும் மோதல் போக்கு நீடிப்பதை மக்கள் வெறுக்கின்றனர்.
ஊரடங்கு குளறுபடிகள்
புதுச்சேரியில் ஊரடங்கு தளர்வுகளுக்குப் பின் கரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் உள்ள 739 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களாக 30 மாவட்டங்கள் மத்திய சுகாதாரத் துறையால் கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில், மிகச்சிறிய மாநிலமான புதுச்சேரி மாநிலத்தில் உள்ள புதுச்சேரி மாவட்டமும் ஒன்று.
நோய்த் தொற்றைத் தவிர்க்க திடீரென ஒரு பகுதிக்கு ஊரடங்கை பிறப்பிப்பது; அந்த ஊரடங்கையும் முறையாக கடைபிடிக்காதது என புதுச்சேரி நகர் பகுதியில் பல்வேறு குழப்படிகள் நடந்து வருகின்றன.
இதற்கு முக்கிய காரணமே புதுச்சேரி மாநில அரசு - ஆளுநர் இடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லாததுதான்.
வெறுப்பின் உச்சத்தில் மக்கள்
கடந்த நான்கு ஆண்டுகளாக அரசுக்கும் ஆளுநருக்கும் நீடித்து வரும் மோதல், கரோனா நெருக்கடி நிலையிலும் நீடிப்பதால் மக்கள் வெறுப்பின் உச்சத்தில் இருக்கின்றனர்.
ராஜ்நிவாஸில் இருந்தபடியே ஆளுநரும், வெளியில் ஆய்வு சென்று வந்த பிறகு முதல்வரும் மாறி மாறி அதிகாரிகளுக்கு உத்தரவை பிறப்பிக்கின்றனர். மிகச்சிறிய மாநிலமான புதுச்சே ரிக்கு 16 ஐஏஎஸ், 6 ஐபிஎஸ் அதிகாரிகள் இருந்தாலும் அதன் பயன் மக்களுக்கு சென்றடையவே இல்லை. முக்கிய எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் தரப்பும் இதுபற்றி எந்த கேள்வியும் எழுப்பாமல் மவுனமாக உள்ளது.
மற்றொரு எதிர்க்கட்சியான அதிமுக தரப்பில் எம்எல்ஏ அன்பழகனிடம் கேட்டதற்கு, " நெருக்கடி காலத்தில் உரிய பணி களை செய்யாமல் ஆளுநரும், முதல்வரும் அமைச்சர்களும் சிறுபிள்ளைத்தனமாக மலிவு விளம்பர அரசியலை நடத்தி மக்க ளுக்கு துரோகம் செய்து வருகின்ற னர்"என்று குற்றம்சாட்டுகிறார்.
"கரோனா தொற்று உடை யோருக்கு சிகிச்சை அளிக்க போதிய படுக்கை வசதிகளை அரசு ஏற்படுத்தித்தரவில்லை.
வெற்று அறிவிப்புகள்
நேற்றைய நிலவரப்படி 1,692பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 3,078 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் கட்டுப்பாடின்றி வெளியே நடமாடு கின்றனர். இதனால் தொற்று அதிகரிக்கிறது. கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி கோவிட் மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், ஒரு தனியார் மருத்துவக்கல்லூரியை அரசு கையகப்படுத்தி கோவிட் மருத்துவமனையாக்கியுள்ளது.
மீதமுள்ள 6 தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் 300 படுக்கைகளை பெற புதுச்சேரி அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆனால், அந்த தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இதுவரையில் கரோனா தொற்றாளர்கள் அனு மதிக்கப்படவில்லை.
ஜிப்மரில், கரோனா தொற்றா ளர்களுக்காக 700 படுக்கைகள் தர வேண்டும் என்று அரசு கூறியதும், வெறும் அறிவிப்பாகவே உள்ளது"
மாஹேயில் பாதிப்பு குறைவு
புதுச்சேரியிலுள்ள 4 பிராந் தியங்களில் தொற்றால் இறப்போர் அதிகரித்து வரும் சூழலில் மாஹே பிராந்தியத்தில் தொற்று பாதிப்பு குறைவாகவும், உயிரிழப்பு நிகழாமலும் தடுக்கப்பட்டுள்ளது. அங்கு மக்களால் கடைபிடிக்கப்படும் மரபு சார்ந்த மருத்துவ முறைகளும் இதற்கு காரணம். ஆனால், புதுச்சேரி அரசு இன்று வரை சித்த மருத்துவம், ஆயுர்வேதம் மற்றும் ஓமியோபதி சிகிச்சையை மக்களுக்கு வழங்கவில்லை.
அதே நேரத்தில் தமிழகத்தில் இந்த மாற்று மருத்துவத்திற்கு முக்கியத்துவம் தருகிறார்கள்." என்றும் மருத்துவ பணிகளில் இருப்பவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.