திருவள்ளூர் மாவட்டப் பகுதிகளில் 2 சிறுமிகள், 3 இளம்பெண்கள் மாயமாகி உள்ளனர்.
திருவள்ளூர், உளுந்தை கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, கடந்த 7-ம் தேதி காலை வீட்டைவிட்டு வெளியே சென்றவர், நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. அதேபோல், திருமழிசை - காமராஜர் தெருவைச் சேர்ந்த ரவியின் மகள் மீனா(23), கடந்த 7-ம் தேதி காலை வீட்டருகே உள்ள கடைக்குச் செல்வதாகக் கூறிச் சென்றவர், இதுவரை வீடு திரும்பவில்லை.
திருத்தணி, சீனிவாசபுரத்தைச் சேர்ந்த ராமனின் மனைவி புவனேஷ்வரி(21), மகள் (5)ஆகியோர் கடந்த மாதம் 29-ம் தேதி வீட்டிலிருந்து வெளியே போனவர்கள் இதுவரை வீடு திரும்பவில்லை. பொன்னேரி அருகே புலிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சிவானந்தகோபாலின் மகள் ஹேமாவதி(22), கடந்த 7-ம் தேதி காலை பொன்னேரியில் உள்ள கால்சென்டர் பணிக்குச் சென்றவர், மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் ஹேமாவதி கிடைக்க வில்லை.
இச்சம்பவங்கள் குறித்து, வழக்குப்பதிவு செய்துள்ள மப்பேடு, வெள்ளவேடு, திருத்தணி மற்றும் பொன்னேரி போலீஸார், காணாமல்போனவர்களை தேடி வருகின்றனர்.