புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும்என்று தமிழக முதல்வருக்கு கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
புதிய கல்விக் கொள்கை விவகாரம் தொடர்பாக ‘பீப்பிள் ஃபர்ஸ்ட்’ அமைப்பு சார்பில் முன்னாள் துணைவேந்தர்கள், கல்வியாளர்கள், பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
புதிய கல்விக் கொள்கை-2020, ஆரம்பக் கல்வி தொடங்கி உயர்கல்வி வரை அனைத்திலும் முடிவெடுக்கும் அதிகாரங்களை மத்திய அரசிடம் குவித்து, இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தை சிதைத்துவிட்டது.
புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்களிடம் கருத்து கேட்டறிவது குறித்து அனைத்து மாநில பள்ளிக்கல்வித் துறை செயலர்களுக்கும் மத்திய கல்வி அமைச்சக செயலர் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி கடிதம் எழுதியுள்ளார்.
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக அரசு தனதுநிலைப்பாட்டை தெரிவிக்காத நிலையில், மாநில அரசு ஊழியர்களான ஆசிரியர்களிடம் அதுபற்றி கருத்து கேட்கப்பட்டுள்ளது. மாநில அரசு, மாநில அமைச்சரவையை மீறி, மாநில அரசின் செயலருக்கு மத்திய செயலர் கடிதம் எழுதியது வழக்கமான நிர்வாக நடைமுறை அல்ல. அரசியலமைப்பு சட்டத்தை மீறியதோடு, நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் இது கேலிக்கூத்து ஆக்கியுள்ளது. எனவே, மத்திய அரசு செயலர் தனது கடிதத்தை வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மத்திய அரசு செயலரின் கடிதத்தின் விளைவுகளை ஆய்வுசெய்யுமாறு தமிழக முதல்வரை வலியுறுத்துகிறோம். தமிழக அரசு புதிய கல்விக் கொள்கை குறித்து விரைவாக ஆலோசித்து தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். மாநில அரசின் உரிமைகளை பாதுகாப்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும்.
புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தை கூட்டி கூட்டாட்சிதத்துவம், சமூகநீதி, சமத்துவம் ஆகியவற்றுக்கு எதிரான விஷயங்களை நிராகரிக்க வேண்டும். கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவரக் கோரி பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
100 பேர் கையெழுத்து
இந்த மனுவில் முன்னாள் துணைவேந்தர்கள் மு.அனந்தகிருஷ்ணன், வீ.வசந்திதேவி, எம்.ராஜேந்திரன், முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் எம்.ஜி.தேவசகாயம், எஸ்.பி.அம்புரோஸ், ஆர்.பூர்ணலிங்கம், சசிகாந்த் செந்தில், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி வி.பாலசந்திரன், கல்வியாளர்கள் சி.டி.குரியன், பிரின்ஸ் கஜேந்திரபாபு, பேராசிரியர்கள் வெங்கடேஷ் ஆத்ரேயா, ஆர்.ராமானுஜம், எஸ்பிஓஏ கல்வி அறக்கட்டளை முன்னாள் செயலர் தாமஸ் பிராங்கோ ராஜேந்திர தேவ் உட்பட 100 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.