தமிழகம்

ஊரடங்கால் இந்த ஆண்டு திருப்பதி திருக்குடை ஊர்வலம் தவிர்ப்பு: திருமலையில் செப். 22-ம் தேதி திருக்குடைகள் சமர்ப்பிப்பு

செய்திப்பிரிவு

சென்னையில் இந்து தர்மார்த்த சமிதி சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருப்பதி திருக்குடை ஊர்வலம், ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டு தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 22-ம் தேதி திருமலை  வெங்க டேஸ்வர சுவாமி கோயிலில் திருக் குடைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன.

இதுதொடர்பாக இந்து தர்மார்த்த சமிதி அறங்காவலர் ஆர்ஆர். கோபால்ஜி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பல நூற்றாண்டு பாரம்பரியமாக, திருப்பதி திருக்குடைகள் திரு மலையில் சமர்ப்பிக்கப்படுகின்றன. இந்து தர்மார்த்த சமிதி வழங்கும் திருக்குடைகளை ஆண்டுதோறும் 20 லட்சம் பக்தர்கள் தரிசித்து வரு கின்றனர். கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளது. பெரிய ஊர்வலங்கள், மக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதனால் சென்னையில் கேசவ பெருமாள் கோயிலில் தொடங்கி, திருவள்ளூர் வழியாக திருமலை வரை செல்லும் ஸ்ரீ திருப்பதி திருக்குடை ஆன்மிக ஊர்வலம் இந்த ஆண்டு மட்டும் தவிர்க்கப்படுகிறது. வரும் செப். 22-ம் தேதி, தமிழக பக்தர்கள் சார்பாக, திருப்பதி பிரம்மோற்சவத்தின்போது, திருமலையில் எழுந்தருளியிருக்கும் ஏழுமலையானுக்கு திருக்குடைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன.

முன்னதாக, சமர்ப்பிக்கப்பட உள்ள 11 அழகிய வெண்பட்டு திருக்குடைகளுக்கும், புரட்டாசி சனிக்கிழமை (செப்.19) பட்டாளம் ஆஞ்சநேயர் கோயிலில், யாக பூஜைகள் நடக்கின்றன. பின்னர் 20-ம் தேதி பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. 22-ம் தேதி திருச்சானுார் தாயார் கோயிலில் 2 திருக்குடைகளும், திருமலை ஏழுமலையான் கோயிலில் 9 திருக்குடைகளும் சமர்ப்பிக்கப்பட உள்ளன. அரசின் ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக, இந்த 3 ஆன்மிக நிகழ்ச்சிகளிலும் பக்தர்கள் மற்றும் திருக்குடை குழுவினருக்கு அனுமதி இல்லை. இந்த ஆண்டு, திருக்குடை வைபவங்களை பக்தர்கள் தரிசிக்க வசதியாக, 19, 20 தேதிகளில் நடைபெறும் சிறப்பு பூஜைகள் ‘TirupatiKudai’ மற்றும் ‘rrgopaljee28’ என்ற முகநுால் பக்கத்திலும், ‘RR. GOPALJEE’ என்ற யூ டியூப் தளத்திலும் நேரலையில் ஒளிபரப்பாக உள்ளன.

திருக்குடை குழு உறுப்பினர்கள், பக்தர்கள், அவரவர் இடங்களில், வரும் 19-ம் தேதி ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு பிரார்த்தனை, அன்னதானம் செய்யவேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT