தினசரி ஊதியத்தில் ரூ.12 உயர்த்தி வழங்கப்படும் என்று அரசு உறுதி அளித்ததால், கடந்த 2 நாட்களாக மாநகராட்சி தொழிலாளர்கள் நடத்தி வந்த போராட்டம் தள்ளிவைக்கப் பட்டது.
கடந்த 2017-ம் ஆண்டு மாநகராட்சி தற்காலிக பணியாளர்களுக்கு தினமும் ரூ.624.16 ஊதியம் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. மேலும் தொழிலா ளர்களுக்கான குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.16,725 என அரசு நிர்ணயித் துள்ளது.
இதில் ஏதேனும் ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என்றும், அடுத்த மாதம் முதல் பல மண்டலங் களில் குப்பை அகற்றும் பணியை தனியார் மேற்கொள்ள இருப்பதால், இதே பணியாளர்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் வலி யுறுத்தி கடந்த திங்கள்கிழமை செங் கொடி சங்கம் சார்பில் 3 ஆயிரத்துக் கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்டனர்.
அவர்களை கைது செய்த போலீஸார் பல்வேறு இடங்களில் அடைத்தனர். மாலையில் அவர்கள் விடுக்கப்பட்டபோதிலும் தொழிலா ளர்கள் வெளியேற மறுத்தனர். கோரிக் கைகளை நிறைவேற்றக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்காத நிலையில், நகராட்சி நிர்வாக செயலர் ஹர்மந்தர் சிங்கை செங்கொடி சங்க நிர்வாகி கள் நேற்று முன்தினம் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.சீனிவாசலு கூறியதாவது:
நகராட்சி நிர்வாக செயலருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தினசரி ஊதியம் ரூ.624, மாத ஊதியம் ரூ.16,725 வழங்க முடியாது என்றும், குப்பை அகற்றும் பணியை தனி யார் மேற்கொள்வதால், இப்பணி யாளர்களை பணியமர்த்துமாறு அறி வுறுத்த முடியாது என்றும் உறுதியாக கூறிவிட்டார். அதே நேரத்தில், கடந்த ஏப்ரல் மாதம் சென்னை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற ஊதிய உயர்வு தொடர்பான பேச்சு வார்தையில் தின ஊதியத்தில் ரூ.12 உயர்த்தி வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. அதை ஏப்ரல் மாதத்தில் இருந்து கணக்கிட்டு வழங்குவதாக உறுதி அளித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து போராட்டத்தை தள்ளி வைத்திருக்கிறோம். பிற மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி, நகராட்சி ஊழியர்கள் அனைவரும் தின ஊதியம் ரூ.500-க்கு குறையாமல் பெறுகின்றனர். ஆனால் சென்னை மாநகராட்சி தொழிலாளர்கள் ரூ.379 மட்டுமே பெறுவதும், அவர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்க அரசு மறுப்பதும் வேதனை அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.