சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கீழே கிடந்த நகையை எடுத்து போலீஸாரிடம் ஒப்படைத்த இளைஞரை அனைவரும் பாராட்டினர்.
சிங்கம்புணரி அருகே உலகம்பட்டி மட்டங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கருத்தவீரன் மனைவி சின்னபொன்னு (23).
இவர் நேற்று மதுரை மாவட்டம் வெள்ளிமலையில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டு, உலகம்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பினார்.
புழுதிப்பட்டி அருகே வந்தபோது மூன்றரை பவுன் நகைகள் இருந்த கைப்பையை தவறவிட்டார். இதை அறியாமல் அவர் வீட்டிற்கு சென்றார்.
இந்நிலையில் கீழே கிடந்த கைப்பையை புழுதிப்பட்டியைச் சேர்ந்த இளங்கோவன் மகன் சிவா (24) எடுத்தார். அதில் நகைகள் இருந்ததை அடுத்து, அந்தப் பையை புழுதிபட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
நகைகளை தேடிச் சென்ற சின்னபொன்னுவிடம், சிறப்பு எஸ்.ஐ சேகரன், காவலர்கள் சரவணன், முருகன் ஆகியோர் நகைப் பையை ஒப்படைத்தனர்.
மேலும் கீழே கிடந்த நகையை எடுத்து மனிதநேயத்தோடு போலீஸாரிடம் ஒப்படைத்த சிவாவை அனைவரும் பாராட்டினர்.