ஊராட்சி ஒன்றியங்களில் அத்தியவாசியப் பணிகள் மேற்கொள்ள ஆட்சியரிடம் முன் அனுமதி பெற வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
மணப்பாறை ஊராட்சி ஒன்றிய தலைவர் ஆர்.அமிர்தவள்ளி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
திருச்சி மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் அத்தியவாசிய பணிகளை மேற்கொள்ள தன்னிடம் முன் அனுமதி பெற வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் ஆகஸ்ட் 5-ல் உத்தரவிட்டுள்ளார்.
அந்த உத்தரவில்,ஊராட்சி ஒன்றியங்களில் பணியாளர்களின் ஊதியம் மற்றும் நிர்வாக செலவினம் தவிர்த்து ஏனைய செலவுகள் மேற்கொள்ளக்கூடாது, டிஎன்ஆர்ஆர்ஐஎஸ் திட்டத்திற்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கு வழங்க வேண்டிய தொகையை முழுமையாக வழங்க வேண்டும், நிறைவேற்றப்பட்ட திட்டப்பணிகளுக்கான நிதி தொகை வழங்க மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குனர்/ திட்ட இயக்குனரிடம் முன் அனுமதி பெற்ற பிறகே நிதியை வழங்க வேண்டும் என்றும் ஆட்சியர் கூறியுள்ளார்.
இந்த உத்தரவால் தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட ஊராட்சி ஒன்றியக்குழுவால் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதை தடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவு உள்ளது. மாவட்ட ஆட்சியர் தனது அதிகார வரம்பை மீறி செயல்பட்டுள்ளார். ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் மேற்கொள்ள வேண்டிய திட்டப்பணிகள், மதிப்பீடு, ஒப்பந்தம் வழங்குவது ஆகியன ஊராட்சி ஒன்றியக்குழுவின் அதிகாரத்துக்கு உட்பட்டது. இதில் தலையிடுவது சட்டவிரோதம். எனவே ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதேப்போல் திருச்சி மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்யக்கோரி திருவெறும்பூர், வையம்பட்டி, மருங்காபுரி ஊராட்சி ஒன்றிய தலைவர்களும் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியம் வாதிடுகையில், ‘ஏற்கெனவே ஆட்சியர் மற்றும் ஊரக வளர்ச்சி முகமையிடம் அனுமதி பெற்றே திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
அந்தப்பணிகள் முடிந்து பணம் வழங்குவதற்கும் அனுமதி பெற வேண்டும் என்பது சட்டவிரோதம் என்றார்.
பின்னர், ஊராட்சி ஒன்றியத்தின் பொது நிதியை செலவு செய்வதற்கு தன்னிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என ஆட்சியர் சொல்வதை ஏற்க முடியாது. ஆட்சியரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டார்.