பிரதிநிதித்துவப் படம். 
தமிழகம்

திருச்சி மாநகரில் செப்.14-ல் 10 இடங்களில் ஆர்ப்பாட்டம்; மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் முடிவு

ஜெ.ஞானசேகர்

திருச்சி மாநகரில் செப்.14-ம் தேதி 10 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் கூட்டாக முடிவு செய்துள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைக் கூட்டம், அக்கட்சியின் மாவட்ட அலுவலகமான வெண்மணி இல்லத்தில் இன்று ( செப். 9) நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், "கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் கொள்கை, மின்சாரத் திருத்தச் சட்டம், அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், வேளாண் உற்பத்திப் பொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவசரச் சட்டம், விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்தப் பாதுகாப்பு அவரசச் சட்டம் ஆகியவற்றை மத்திய அரசு கைவிட வேண்டும்.

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை நாட்களை அதிகரிப்பதுடன், இந்தத் திட்டத்தை பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். மத்திய அரசின் விவசாயிகளுக்கான மானியத் திட்டத்தை விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் குத்தகை விவசாயிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். நுண்நிதி நிறுவனங்கள், வங்கிகள், கூட்டுறவு அமைப்புகள் ஆகியன கடன் வசூலை ஓராண்டுக்கு நிறுத்திவைக்க வேண்டும். அனைத்துக் கடன்களுக்கும் ஓராண்டுக்கு வட்டித் தள்ளுபடி அளிக்க வேண்டும். பொதுத்துறைகளைத் தனியார் மயமாக்குவதைக் கைவிட வேண்டும். தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும்" ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் செப்.14-ம் தேதி திருச்சி மாநகரில் 10 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

SCROLL FOR NEXT