தமிழகம்

விவசாயிகளுக்கான நிதியுதவி திட்ட முறைகேட்டில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்: விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்

இ.மணிகண்டன்

விவசாயிகளுக்கான நிதியுதவி திட்ட முறைகேட்டு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலரும் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினருமான மாணிக்கம்தாகூர் வலியுறுத்தியுள்ளார்.

விருதுநகரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உறுப்பினர்களின் அடையாள அட்டையை புதுப்பிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலரும் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினருமான மாணிக்கம்தாகூர் கலந்துகொண்டு புதிதாக வடிவமைக்கப்பட்ட கட்சியின் உறுப்பினர் அடையாள அட்டையை உறுப்பினர்களுக்கு வழங்கினார்.

அப்போது அவர் அளித்த பேட்டியில், நடைபெறவுள்ள பாராளுமன்ற கூட்டத்தில் கேள்வி நேரம் குறைக்கப்பட்டு இருப்பதை எதிர்க்கட்சிகள் அனைவரும் சேர்ந்து எதிர்க்க உள்ளோம்.

கேள்வி நேரம் எழுந்து பூர்வமாக மட்டும் நடைபெறும் என்பதற்கும் எதிர்ப்புத் தெரிவிக்கிறோம். கிசான் திட்டத்தில் ஆளும் கட்சி துனை இல்லாமல் இவ்வளவு பெரிய மோசடி நடக்க வாய்ப்பு இல்லை. ஆகையால் உச்ச நீதி மன்றம் கட்டுப்பாட்டில் செயல்படும் சிபிஐ அதிகாரிகள் விசாரனை செய்ய வேண்டும்.

விருதுநகர் மாவட்டத்தில் கிசான் திட்டத்தில் மோசடி குறித்து 10ம் தேதி (இன்று) நடைபெறவுள்ள மிசா கூட்டத்தில் கேட்க உள்ளேன். விவசாயிகளுக்கு சென்றடைய வேண்டிய பலனை கொள்ளையடிக்க நினைக்கிறவர்களிடம் இந்தத் திட்டம் சென்றடைந்துள்ளது.

மத்திய அரசின் திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது வெளியே வந்துள்ளது. மத்திய அரசு மடியில் கனமில்லை என்றால் உச்சநீதிமன்றம் கட்டுப்பாட்டிலுள்ள சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.

அக்டோபர் மாதம் கரோன பாதிப்பில் இந்தியா உலக அளவில் முதல் இடத்தை அடையும் என கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் செப்டம்பர் 21-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்படுத்த என மத்திய அரசு நெறிமுறை வழங்கி இருப்பது எதிர்கால சமூகத்தை மிக கொடிய நோய்க்கு தள்ளும் முயற்சி. கரோனா வைரஸ் தொற்று பரவும் நிலை குறையாத காலத்தில் பள்ளியைத் திறப்பது ஏற்க முடியாத ஒன்று. இந்த முடிவை வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்க்கும் என்றார்.

நிகழ்ச்சியில், விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ஸ்ரீராஜா சொக்கர், முன்னாள் நகர்மன்றத் தலைவர் பாலகிருஷ்ணசாமி, நகர காங்கிரஸ் கட்சித் தலைவர் வெயிலுமுத்து, கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சிசுந்தரம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT