கரோனாவை முழுமையாகக் கட்டுப்படுத்தும் வரை புதுச்சேரி யூனியன் பிரதேசப் பகுதிகளுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தக் கோரிய மனுவுக்குப் பதிலளிக்க மத்திய அரசுக்கும், புதுச்சேரி அரசுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி அரசு கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டதாகக் கூறியும், கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும்வரை புதுச்சேரியில் முழு ஊரடங்கை அமல்படுத்தக் கோரியும், புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், கரிக்கலாம்பாக்கம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கோ.அ.ஜெகன்நாதன் ஆகியோர் பொதுநல வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
அவர்கள் தாக்கல் செய்த மனுவில், “ஒருங்கிணைந்த கரோனா தடுப்புத் திட்டத்தை உருவாக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். ஊரடங்கு காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவியும், உணவுப் பொருட்கள் வழங்கவும் உத்தரவிட வேண்டும். கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்” எனக் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, மத்திய உள்துறைச் செயலர், மத்திய சுகாதாரத்துறைச் செயலர், புதுச்சேரி தலைமைச் செயலர், வருவாய்த்துறைச் செயலர், சுகாதாரத்துறைச் செயலர், மாவட்ட ஆட்சியர், காரைக்கால் மாவட்ட ஆட்சியர், மாஹி, ஏனாம் தலைமைச் செயல் அதிகாரிகள் ஆகியோர் 6 வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.