தமிழகம்

குமரியில் மீண்டும் சூறைக்காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

எல்.மோகன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று மீண்டும் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. கன்னிப்பூ அறுவடை பணிகள் தொடங்கியுள்ள நேரத்தில் நெல் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.

3 தினங்களுக்கு முன்பு விடிய விடிய கனமழை பெய்ததால் அணைகளில் நீர்வரத்து அதிகரித்திருந்தது. ஆறு, கால்வாய்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடின. பின்னர் மழை நின்று நேற்று கடும் வெயில் அடித்து வந்தது.

இதற்கிடையே இன்று அதிகாலையில் இருந்து மீண்டும் மழை பெய்ய துவங்கியது. காலை 7 மணியில் இருந்து சூறை காற்றுடன் கனமழையாக பெய்தது.

தொடர்ந்து 5 மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடின. இதைப்போல் ஆறு, குளங்களிலும் மழை நீர் பாய்ந்தோடியது. மாவட்டம் முழுவதும் மேகமூட்டத்துடன் குளிரான தட்பவெப்பம் நிலவியது.

நாகர்கோவில், கன்னியாகுமரி, மார்த்தாண்டம், தக்கலை, குளச்சல், களியக்காவிளை, குலசேகரம், ஆரல்வாய்மொழி, திங்கள்நகர் என மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

வாகனங்களில் பயணிப்போர் பகலிலும் முகப்பு விளக்குகளை ஒளிர்விட்டபடி சென்றனர். நாகர்கோவிலில் பாதாள சாக்கடை பணிகளுக்கு தோண்டப்பட்ட குழிகளின் நிறைந்த மழைநீருக்கு மத்தியில் வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தவாறு பேராபத்துடன் பயணித்தன. சூறைகாற்றால் வடசேரி கிறிஸ்டோபர் பேரூந்து நிலையத்தில் பொது கழிப்பறையின் மேற்கூறை காற்றில் பறந்து கீழே விழுந்தது.

கன்னியாகுமரி முதல் நீரோடி வரையிலான குமரி கடல் பகுதிகள் சூறைகாற்று, மற்றும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் பாதியளவு மீனவர்களே கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தனர். கோவளம், கடியப்பட்டணம் பகுதியில் கடல் சீற்றத்தால் தூண்டில் வளைவுகள் கருங்கற்கள் சிதறி கடலில் விழுந்து சேதம் அடைந்தன.

ஏற்கெனவே மழை நின்றிருந்த நிலையில் பேச்சிப்பாறை அணையில் இருந்து 423 கனஅடி தண்ணீர் மீண்டும் பாசனத்திற்காக திறக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அணை பகுதிகளில் மீண்டும் பெய்த கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்திருந்தது. நீர்பிடிப்பு பகுதியான பாலமோரில் 34 மிமீ., மழை பெய்திருந்தது. பேச்சிப்பாறை நீர்மட்டம் 30 அடியாகவும், பெருஞ்சாணி அணை 62 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்தது.

மாவட்டம் முழுவதும் ரப்பர் பால்வெட்டும் தொழில், செங்கல்சூளை, கட்டிட தொழில், மீன்பிடி தொழில், தோட்ட தொழில்,
நெல் அறுவடை பணி, தேங்காய் வெட்டும் தொழில் என அனைத்து தரப்பு வேலைகளும் முடங்கின. கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT