பிரதிநிதித்துவப் படம். 
தமிழகம்

புதுச்சேரியில் 18 ஆயிரத்தைக் கடந்த கரோனா தொற்று: புதிதாக 341 பேர் பாதிப்பு; மேலும் 10 பேர் உயிரிழப்பு

அ.முன்னடியான்

புதுச்சேரியில் இன்று புதிதாக 341 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 ஆயிரத்தைக் கடந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 350-ஐ நெருங்கியது.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (செப். 9) கூறியதாவது:

"புதுச்சேரியில் அதிகபட்சமாக 2,560 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி-302, காரைக்கால்-2 , ஏனாம்-22, மாஹே-15 பேர் என மொத்தம் 341 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார்

மேலும், புதுச்சேரியில் 9 பேர், காரைக்காலில் ஒருவர் என 10 பேர் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரி கல்லூரி சாலையைச் சேர்ந்த 63 வயது மூதாட்டி, நெல்லித்தோப்பு மூவேந்தர் வீதியைச் சேர்ந்த 32 வயது ஆண், பாகூர் பழைய காமராஜர் நகரைச் சேர்ந்த 62 வயது மூதாட்டி, அரியாங்குப்பம் அன்னை வேளாங்கண்ணி நகரைச் சேர்ந்த 67 வயது மூதாட்டி ஆகிய 4 பேரும் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியிலும், புதுச்சேரி பாரதிதாசன் வீதியைச் சேர்ந்த 64 வயது முதியவர், ரெட்டியார்பாளையம் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரைச் சேர்ந்த 83 வயது முதியவர் ஆகிய இருவரும் ஜிப்மரிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

கோரிமேடு இந்திரா நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்த 63 வயது முதியவர் மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரியிலும், திலாசுப்பேட்டை வீமன் நகரைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி, காரைக்கால் கீழகாசக்குடி தெரேசா நகரைச் சேர்ந்த 59 வயது முதியவர் பிம்ஸ் மருத்துவக் கல்லூரியிலும், காரைக்கால் கோட்டுச்சேரி கீழத்தெருவைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி காரைக்கால் அரசு பொது மருத்துவமனையிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 347 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.92 சதவீதமாக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 18 ஆயிரத்து 84 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் புதுச்சேரியில் 2,850 பேர், காரைக்காலில் 118 பேர், ஏனாமில் 110 பேர் என 3,078 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், புதுச்சேரியில் 1,416 பேர், காரைக்காலில் 63 பேர், ஏனாமில் 171 பேர், மாஹேவில் 42 பேர் என மொத்தம் 1,692 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தமாக 4,770 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று புதுச்சேரியில் 318 பேர், காரைக்காலில் 24 பேர், ஏனாமில் 38 பேர், மாஹேவில் 6 பேர் என மொத்தம் 386 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 967 (71.70 சதவீதம்) ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 88 ஆயிரத்து 60 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 67 ஆயிரத்து 745 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது".

இவ்வாறு மோகன்குமார் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT