கேரளா தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை செய்தனர்.
கேரளாவில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தை பயன்படுத்தி நடந்த 30 கிலோ தங்க கடத்தல் வழக்கு கடந்த சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் அதிகாரி ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை தற்போது என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக கோவை கடைவீதி அருகேயுள்ள பவிழம் வீதியில் வசித்து வரும் நந்தகுமார் (42) என்பவரது வீட்டில் டிஎஸ்பி தலைமையிலான என்.ஐ.ஏ அதிகாரிகள் குழுவினர் இன்று (செப். 9) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
இவரது வீட்டின் தரைத் தளத்தில் பட்டறை உள்ளது. முதல் தளத்தில் வீடு உள்ளது. பட்டறை மற்றும் வீடு இரண்டு இடத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இவருக்கு தங்க கட்டிகள் இதுவரை எவ்வளவு அளிக்கப்பட்டுள்ளன, அவை ஆபரணங்களாக செய்யப்பட்டு விற்கப்பட்டதா, இருதரப்புக்கும் இடையே எவ்வளவு நாட்கள் வணிகத் தொடர்பு இருந்தது , எவ்வாறு தொடர்பு ஏற்பட்டது என்பது போன்ற தகவல்கள் குறித்து என்.ஐ.ஏ குழுவினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சோதனைக்குப் பின்னர் நந்தகுமாரை தங்களது அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரிக்கவும் என்.ஐ.ஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.