ரவுடி சங்கர் என்கவுன்ட்டர் தொடர்பாக விசாரணை நடத்திய எழும்பூர் குற்றவியல் நடுவர், தனது அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சங்கர், சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் இதுதொடர்பாக சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரணை கோரியும், தனதுமகனின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்யக்கோரியும் சங்கரின் தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு கடந்த முறை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, ரவுடி சங்கர் என்கவுன்ட்டர் தொடர்பான வழக்கு சிபிசிஐடிவிசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதி, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் மற்றும் சிபிசிஐடி போலீஸார் தங்களது அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் சிவசக்திவேல் கண்ணனும், சிபிசிஐடி போலீஸாரும் அறிக்கை தாக்கல் செய்தனர். அதையடுத்து நீதிபதி இந்த வழக்கு விசாரணையை நாளைக்கு (செப்.10) தள்ளிவைத்து, சங்கரின் பிரேதப் பரிசோதனை அறிக்கையை மனுதாரருக்கு வழங்க உத்தரவிட்டுள்ளார்.