கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய தீபுஉள்ளிட்டோர் அடுத்த விசாரணைக்கு நீலகிரி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை எனில் பிடிவாரன்ட் பிறப்பிக்கலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஒரு கும்பல் நுழைந்து, காவலாளியை கொலை செய்து பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றது.
நீலகிரி நீதிமன்றத்தில்..
இந்த வழக்கில் சயான், மனோஜ், தீபு, சதீஷன், சந்தோஷ் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இதில் தொடர்புடைய கேரளாவைச் சேர்ந்த தீபு, சதீஷன், சந்தோஷ் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்பதால், அவர்களுக்கு கடந்த மாதம் பிடிவாரன்ட் பிறப்பித்து நீலகிரி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை ரத்து செய்யக் கோரி தீபு, சதீஷன், சந்தோஷ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதில் கரோனா காரணமாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், இந்த மூவரும் அடுத்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை எனில் அவர்களுக்கு மீண்டும் பிடிவாரன்ட் பிறப்பிக்கலாம் என நீலகிரி நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.