தேசிய மீன்வளக் கொள்கையை கண்டித்து மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பு சார்பில், கூவத்தூர் அடுத்த பெருந்துறவு மீனவர் கிராமத்தில் மீனவர்கள் நேற்று கடலில் இறங்கி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த பெருந்துறவு கிராமத்தில், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் சாரங்கபாணி தலைமையில், மத்திய அரசின் தேசிய மீன்வளக் கொள்கையை கண்டித்து மீனவர்களின் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. மத்திய அரசு கொண்டுவர உள்ள தேசிய மீன்வளக் கொள்கை, கடற்கரை ஒழுங்காற்று மண்டலம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு முறைகளை எதிர்த்து, மீனவர்கள் கருப்புக்கொடி ஏந்தி கடலில் இறங்கி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் கடற்கரை ஒழுங்காற்று மண்டலம் கடல் வளத்தை அழிக்கக்கூடிய ஆபத்துகள் நிறைந்த வேதி தொழிற்சாலை, அணு உலை உள்ளிட்டவற்றை அனுமதிக்கும் அம்சங்களை உள்ளடக்கியது. இதனால் கடற்கரை பாதிப்பு அடையலாம் என மீனவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அமைப்பாளர் ஐயப்பன், செயலாளர் செங்கழணி, ஒருங்கிணைப்பாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும்மீனவர்கள் கலந்துகொண்டனர்.