ரயில், பேருந்துகள் இயங்கத் தொடங்கியதையடுத்து, ஈரோடு ஜவுளி சந்தைக்கு வெளிமாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் அதிக அளவில் பங்கேற்றதால் சந்தையில் விற்பனை அதிகரித்தது.
ஈரோடு கனி ஜவுளிச்சந்தையில் தினச்சந்தையில் சாதாரண நாட்களில் ரூ.25 லட்சம் வரையிலும், பண்டிகை காலங்களில் ரூ.ஒரு கோடி வரையிலும் ஜவுளிவகைகள் விற்பனையாகி வருகின்றன. வாரச்சந்தையைப் பொறுத்தவரை வாரம் ரூ.2 கோடிக்கும், தீபாவளி, பொங்கல், ஓணம் போன்ற பண்டிகை நாட்களில் ரூ.5 கோடி வரையிலும் ஜவுளி விற்பனையாகி வருகிறது. இதேபோல் அசோகபுரம் மற்றும் சென்ட்ரல் திரையரங்கு அருகேயும் ஜவுளிச்சந்தைகள் செயல்பட்டு வருகின்றன.
கரோனா பாதிப்பு காரணமாக மார்ச் மாதம் முதல் ஜவுளிச்சந்தைகள் மூடப்பட்டன. அதன் பின்னர், ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து, கடந்த மாதம் ஜவுளிச்சந்தை மீண்டும் தொடங்கியது. ஆனால், பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படாததால் வெளிமாவட்ட, வெளிமாநில வியாபாரிகள் ஜவுளிக் கொள்முதலுக்காக வர முடியவில்லை.
இந்நிலையில் 7-ம் தேதி முதல் ரயில் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால், வெளிமாவட்ட வியாபாரிகள் ஜவுளி கொள்முதலுக்கு வரத் தொடங்கியுள்ளனர். இதனால், திங்கள் கிழமை இரவு முதல் புதன்கிழமை வரை நடக்கும் கனிஜவுளிச்சந்தையின் வாரச்சந்தையில் ஜவுளி விற்பனை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக வியாபாரிகள் கூறும்போது, ‘ஐந்து மாதங்களுக்குப் பிறகு சிறு வியாபாரிகள் தற்போதுதான் வருகின்றனர். இருப்பினும், பணப்புழக்கம் குறைவாக இருப்பதால், கடந்த காலங்களைப் போல் விற்பனை பெரிய அளவில் நடக்கவில்லை. தீபாவளி வரை தடையின்றி விற்பனை நடைபெற்றால், இதுவரை சந்தித்த இழப்பை ஓரளவு சரிசெய்ய முடியும்’ என்றனர்.