சென்னை போலீஸாருக்கு அவர்களது பிறந்த நாளன்று சம்பளத்துடன் விடுப்பு வழங்கிகாவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சட்டம் - ஒழுங்கை நிலை நாட்டவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களை தடுக்கவும்காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், பண்டிகைகள், இயற்கை பேரிடர்கள், அரசு விடுமுறை தினங்களிலும் போலீஸார் பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகளில் விடுப்பு இன்றி சுழற்சி முறையில் பணி செய்து வருகின்றனர்.
தற்போது, கரோனா தடுப்பு பணியிலும் முன்கள வீரர்களாககாவலர்கள் உள்ளனர். இதனால், பணியின்போது சென்னை பெருநகர காவலில் மட்டும் இதுவரை 2,308 போலீஸார் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை முடிந்து 1,921 காவலர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர்.
அனைத்து காலங்களிலும் விடுப்பின்றி பணி செய்து வருவதால் போலீஸார் மன அழுத்தத்துக்கு ஆளாவதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, பிற அரசு துறையினருக்கு வழங்கப்படுவதுபோல் வார ஓய்வு வழங்க வேண்டும் என்று போலீஸார் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், போலீஸாருக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் சென்னை காவலில் பணிபுரியும் போலீஸார் அனைவருக்கும், அவர்களது பிறந்தநாளன்று விடுப்பு எடுக்க அனுமதி அளித்து காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுப்பின்போது சம்பளம் பிடித்தம் செய்யப்படாது எனவும் தெரிவித்துள்ளார்.
இன்று முதல் அமலாகிறது
கூடவே, பிறந்தநாளுக்கு முன்தினம் சம்பந்தப்பட்ட போலீஸாருக்கு அவர் பணி செய்யும் காவல் நிலையம் அல்லது பிரிவில் சக காவலர்கள் வாழ்த்து தெரிவிக்க வேண்டும், பிறந்தநாளுக்குரிய நபரின் பெயரை கரும்பலகையில் எழுதி வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
காவல் ஆணையரின் இந்த உத்தரவுக்கு போலீஸார் மற்றும் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்த உத்தரவு இன்று முதல்(செப். 9) அமலுக்கு வர உள்ளதாக போலீஸ் அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.