திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ரூ.13 ஆயிரத்து 314 கோடியில் தொழில் முனையம் அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் விதி 110-ன் கீழ் அறிக்கை ஒன்றை முதல்வர் படித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டத்தில் சிப்காட் மூலம் 224 ஏக்கரில் ரூ.150 கோடியில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும். இப்பூங்காவில் தினமும் 1 கோடி லிட்டர் திறனுள்ள கடல் நீர் சுத்திகரிப்பு ஆலை நிறுவப்படும். இங்கு ரூ.450 கோடியில் 30 ஜவுளித் துறை நிறுவனங்கள் அமைய உள்ளன. இதன்மூலம் 6 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு உருவாகும்.
முதல் தலைமுறை தொழில்முனைவோர், குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு நிதி உதவி அளிக்க தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்துக்கு (டிக்) ஒருமுறை மூலதனமாக ரூ.100 கோடி வழங்கப்படும். நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் தனியாருடன் இணைந்து ரூ.200 கோடியில் காஸ்டிக் சோடா தொழிற்சாலை அமைக்கப்படும்.
கோவை சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ரூ.32.61 கோடியில் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். இதனால் சுமார் 1,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும். வானூர்தி உற்பத்தி சார்ந்த நிறுவனங்களின் வளர்ச்சிக்காக காஞ்சிபுரம் மாவட்டம் வல்லம், வடகால் கிராமங்களில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) மூலம் ரூ.350 கோடியில் 2 லட்சம் சதுர அடியில் உயர் கணினி, பொறியியல் வடிவமைப்பு மையம் அமைக்கப்படும். இங்கு 50-க்கும் அதிகமான வானூர்தி வடிவமைப்பு நிறுவனங்கள் தங்களது மையங்களை அமைக்கும்.
தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023-ன்படி, சென்னை - பெங்களூரு தொழில் வளாகத் திட்டத்தில் உள்ள பொன்னேரி தொழில் முனையம் ரூ.13 ஆயிரத்து 314 கோடியில் 20 ஆண்டுகளில் 3 கட்டங்களாக மேம்படுத்தப்படும். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகாவில் உள்ள 10 கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 21 ஆயிரத்து 996 ஏக்கரில் இந்த மையம் அமையும்.
ரூ.50 கோடியில் உயிரி தொழில்நுட்ப மூலதன முதலீட்டு நிதி உருவாக்கப்படும். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையம், 16 ஆயிரம் சதுர மீட்டர் கண்காட்சி அரங்குகள், உணவு அரங்கம், பல அடுக்க வாகன நிறுத்துமிடம், ஊழியர்கள் தங்குமிடம், பயன்பாட்டு கட்டிடம் போன்ற வசதிகளுடன் ரூ.298 கோடியில் மேம்படுத்தப்படும்.
ரூ.270 கோடியில் சரக்காளுமை பூங்கா
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை ஆகிய இடங்களில் ரூ.270 கோடியில் 30 ஏக்கரில் சரக்காளுமை பூங்கா அமைக்கப்படும். ரூ.37.19 கோடியில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையும், ரூ.56 கோடியில் நடிப்பிசை புலவர் கே.ஆர்.ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலையும், ரூ.25.80 கோடியில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையும் நவீனப்படுத்தப்படும்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.