தமிழகம்

நெல்லையில் ரூ.38 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருள் பறிமுதல்

அ.அருள்தாசன்

கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு 2 லாரிகளில் கடத்திச் செல்லப்பட்ட ரூ.38 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களைத் திருநெல்வேலி மாநகரப் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருநெல்வேலி மாநகரக் காவல் எல்லைக்குட்பட்ட கரையிருப்பு பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 லாரிகளை தச்சநல்லூர் போலீசார் சோதனையிட்டனர். அப்போது அந்த லாரிகளில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக அந்த லாரிகளில் இருந்த கரையிருப்புப் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் உட்பட லாரி ஓட்டுனர்கள் 2 பேரைப் போலீஸார் பிடித்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் பல லட்சம் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட பான் மசாலா பொருட்களையும் லாரியுடன் கைப்பற்றி தச்சநல்லூர் காவல் நிலையம் கொண்டு சென்றனர். மொத்தம் 6 டன் எடையுள்ள ரூ.38 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகப் போலீஸார் தெரிவித்தனர்.

பிடிபட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கேரள மாநிலத்திற்குப் பான்மசாலா உள்ளிட்ட குட்கா பொருட்கள் கொண்டு செல்வது தெரியவந்தது. பிடிபட்ட ராமச்சந்திரன் திருநெல்வேலி மாநகரப் பகுதியில் உள்ள கரையிருப்பைச் சேர்ந்தவர் என்பதால் கரையிருப்பு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் குட்கா பொருட்களைப் பதுக்கி வைக்க ஏதேனும் கிட்டங்கி இருக்கிறதா எனவும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கர்நாடகத்திலிருந்து பல்வேறு சோதனைச் சாவடிகளையும் கடந்து லாரிகளில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களைக் கடத்தி வந்தது திருநெல்வேலி போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT