தமிழகம்

வடகிழக்கு பருவ மழையையொட்டி நெல்லையில் 24 மணிநேர கட்டுப்பாட்டு மையம் அமைப்பு

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி 24 நேர கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்தார்.

வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் தொடங்குவதை முன்னிட்டு ஆட்சியர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது பருவமழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது:

அனைத்து எண்ணெய் நிறுவனங்களும் தேவையான அளவில் எரிபொருள் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். கடந்த பேரிடர் காலங்களில் ஏற்பட்ட அனுபவங்களில் அடிப்படையில் காவல்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் உதவியுடன் குறைகளை களைந்திட வேண்டும். தொலை தொடர்புகளில் பாதிப்புகள் ஏதும் ஏற்படாதவாறும் அவ்வாறு ஏற்படும் பட்சத்தில் இணைப்புகளை உடனுக்குடன் சீர் செய்திடும் வகையில், போதுமான எண்ணிக்கையில் சேவை பணியாளர்களை வைத்துக்கொள்ளவும், தொலைத் தொடர்புகள் எவ்வித இடர்பாடுகள் இன்றி செயல்படுவதை உறுதிசெய்ய கொள்ள வேண்டும்.

கல்வி நிறுவனங்களிலுள்ள மின்சார இணைப்புகள், கழிவு நீர் கால்வாய்களில் விழும் நிலையில் உள்ள மரக்கிளைகள், கழிவு நீர் தேங்காமல் உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், மோசமான கட்டிட பகுதிகளைத் தவிர்த்திட வேண்டும். அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் தீவிர சிகிச்சை, இதர சிகிச்சை பிரிவுகளில் போதுமான மின்சார சேமிப்பு ஏற்பாடுகள் செய்தல், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், அவசர மருந்துகள், உயிர்காக்கும் உபகரணங்கள் போன்றவை போதுமான அளவில் பயன்படுத்தும் நிலையில் வைத்திடவும், ஜெனரேட்டர்களை தரைதளத்தில் இருந்து உயர்ந்த பகுதி அல்லது முதல் தளத்தில் அமைத்திடவும், அவற்றை இயக்கும் விதத்தில் போதுமான அளவில் எரிபொருள் கையிருப்பில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும். மேலும் தீ பாதுகாப்பு திட்ட வரைவினை தயார் செய்து தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும்.

மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்படும்போது மாவட்ட அவசரகால செயல் மையத்தில் செயல்பட்டுவரும் கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் இலவச தொலைபேசி எண் 1077 -க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இக்கட்டுப்பாட்டு மையம் 24 மணிநேரமும் செயல்படும் என்று ஆட்சியர் தெரிவித்தார்.

கூட்டத்தில் மாவட வருவாய் அலுவலர் பெருமாள் , திருநெல்வேலி கோட்டாச்சியர் சிவ கிருஷ்ண மூர்த்தி, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் பிரதீக் தயாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT