சென்னையில் காவல் நிலையங்களில் காவலர் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக ஆயுதப்படை காவலர்கள் 400 பேரை காவல் நிலையங்களுக்கு மாற்று சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
காவல்துறைக்கு கடைநிலை காவலர்களான இரண்டாம் நிலைக்காவலர்கள் சீருடைப்பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். இது தவிர நேரடி உதவி ஆய்வாளர்களும் தேர்வு செய்யப்படுகின்றனர். காவல்துறைக்கு தேர்வு செய்யப்படும் இரண்டாம் நிலைக்காவலர்கள் நேரடியாக சட்டம் ஒழுங்குப் பணிக்காக காவல் நிலையங்களுக்கு அனுப்பப்படுவதில்லை.
தேர்வு செய்யப்படும் இரண்டாம் நிலைக்காவலர்கள் தமிழ்நாடு சிறப்பு காவல்படை பிரிவில் பணியாற்றுவார்கள், அதிலிருந்து சீனியாரிட்டி அடிப்படையில் ஆயுதப்படைக்கு மாற்றப்படுவார்கள், அங்கிருந்து சீனியாரிட்டி அடிப்படையில் காவல் நிலையங்களுக்கு அனுப்பப்படுவார்கள்.
இந்த காலக்கட்டத்தில் அவர்கள் முதல் நிலைக்காவலர்களாக பதவி உயர்வும் பெற்று விடுவார்கள். பாதுகாப்புப்பிரிவு, போக்குவரத்து, அதிகாரிகள், காவல் நிலைய வாகனங்கள் ஓட்டுநர் அனைத்துக்கும் ஆயுதப்படை பிரிவு போலீஸாரே கூடுதல் பணியாக அமர்த்தப்படுவார்கள்.
தற்போது சென்னையில் ஆயுதப்படைப்போலீஸாரில் இரண்டாம் நிலை மற்றும் முதல் நிலைக்காவலர்கள் 2010 மற்றும் 2011 ஆண்டு பேட்சை சேர்ந்த போலீஸார் 400 பேர் சென்னையில் உள்ள நான்கு மண்டலங்களுக்கு கீழ் உள்ள காவல் நிலையங்களுக்கு மாற்றி காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் காவல் நிலையங்களில் போலீஸார் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இதுகுறித்து காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு வருமாறு:
"சென்னை நகர காவல் ஆயுதப்படையில் பணிபுரிந்து வரும் காவலர்களை சட்டம், ஒழுங்கு காவல் நிலையத்திற்கு பணியிட மாறுதல் செய்து ஆணை வழங்கப்படுகிறது. ஆயுதப்படையிலிருந்து காவல் நிலையத்திற்கு பணியிட மாறுதல் செய்யப்பட்ட காவலர்கள் தற்போது வசித்து வரும் ஆயுதப்படை காவலர் குடியிருப்பினை உடனடியாக காலி செய்யும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.
அது தொடர்பாக சம்மந்தப்பட்ட ஆயுதப்படை துணைக்கமிஷனர் ஆயுதப்படை காவலர்களை உடனடியாக பணியிட மாறுதலில் விடுவித்து சட்டம் ஒழுங்கு காவல் பிரிவுக்கு சம்மந்தப்பட்ட இணைக்கமிஷனர்களிடம் அறிக்கை செய்ய அறிவுறுத்த வேண்டும்.
சென்னை நகர சட்டம், ஒழுங்கு தெற்கு, மேற்கு, வடக்கு மற்றும் கிழக்கு மண்டல இணைக்கமிஷனர்கள் போலீஸார் பணியிட மாறுதலில் காவல் நிலையங்களுக்கு அமர்த்தப்பட்ட நாளினை கமிஷனர் அலுவலகத்திற்கு தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் பணியிடமாறுதல் செய்யப்பட்ட காவலர்கள் தங்கள் டிரான்ஸ்பரை ரத்து செய்யவோ அல்லது வேறு மாவட்ட தாலுக்கா காவல் நிலையத்திற்கு மாறுதல் வேண்டியோ ஓர் ஆண்டு வரை கோரி மனு சமர்ப்பிக்கவோ கூடாது’’.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.