தனியார் நிலங்களை உரியவர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தி கோவில்பட்டியில் தேமுதிக சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பும் போராட்டம் நடந்தது.
கோவில்பட்டி தலைமை தபால் அலுவலகத்துக்கு முன் தேமுதிக மாவட்டச் செயலாளர் அழகர்சாமி தலைமையில் வந்தவர்கள், கயத்தாறு வட்டம் முடுக்கலான்குளம் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான நிலத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தி கோஷங்கள் முழங்கினர். பின்னர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பக் கொண்டு வந்த 247 மனுக்களைத் தபால் பெட்டியில் செலுத்தினர்.
மனுவில், கயத்தாறு வட்டம் முடுக்கலான்குளம் கிராமத்தில் மொத்தம் 263.28 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலங்கள் எட்டயபுரம் மகாராஜா குடும்பத்துக்குச் சொந்தமாக இருந்து, பின்னர் உரிய கிரைய ஆவணங்கள் மூலம் உரிமை மாற்றம் ஏற்பட்டு கிரையம் பெற்றவர்களின் உடைமையிலும், அனுபவத்திலும் இருந்து வருகிறது.
இதில், ''கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய 4-வது வார்டு உறுப்பினர் நிர்மலா, லட்சுமணப்பெருமாள், விஜயலட்சுமி, ஜெயக்குமார், பாலகுமார், சீனிவாசராமானுஜம், வெங்கிட சுப்புராஜ், செல்வராணி, ஜெயபாரதி உள்ளிட்ட பலருக்கு நிலங்கள் உள்ளன.
இந்த நிலங்கள் 2015-ம் ஆண்டு திடீரென எந்தவித அறிவிப்பும், விசாரணையும் இன்றி பட்டாக்கள் நீக்கப்பட்டு, அரசு நிலம் என்று கணினிப் பட்டாவில் தவறுதலாக உள்ளது. இது தனியார் சொத்துகள் ஆகும். அரசு நிலம் என காட்டப்படுவது சட்டவிரோதமாகும்.
இதுகுறித்து 2015-ம் ஆண்டு முதல் பலமுறை அனைத்து அதிகாரிகளுக்கும் மனு வழங்கியும், மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து 10 முறைக்கு மேல் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பட்டாக்களை மாற்ற சிலர் லஞ்சம் கேட்கின்றனர். எனவே, அனைவருக்கும் உடனடியாகப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனக் குறிப்பிட்டுள்ளனர்.
நேதாஜி சிலை அமைக்க இடம் வேண்டும்
இதே போல் தேமுதிகவினர் கோட்டாட்சியரிடம் வழங்கிய மனுவில், ''தென் தமிழகத்தில் நேதாஜிக்குப் பெருமை சேர்க்கும் வகையில் எந்த ஊரிலும் சிலைகள் இல்லை. பேருந்து நிலையத்துக்கோ, அரசு மருத்துவமனைகளுக்கோ நேதாஜி பெயர் சூட்டவில்லை. அந்த வகையில் கோவில்பட்டியில் நேதாஜியின் சிலை வைக்க இடம் தேர்வு செய்ய வேண்டும். ஜனவரி 23-ம் தேதி அவரது பிறந்த நாள் வருகிறது. அதற்குள் கோவில்பட்டியில் தகுதியான இடத்தைத் தேர்வு செய்து வழங்க வேண்டும்'' என தெரிவித்துள்ளனர்.
இதில், நேதாஜி நற்பணி மன்றத் தலைவர் பாலமுருகன், ஒன்றியச் செயலாளர் சுரேஷ், அவைத்தலைவர் கொம்பையா, பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன் பெருமாள்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.