உதகையில் உள்ள விதை பரிசோதனை நிலையத்தை ஆய்வு செய்த விதைச்சான்று இயக்குநர் மு.சுப்பையா. 
தமிழகம்

விவசாயிகளுக்கு 1,10,000 மெட்ரிக் டன் விதைகள் விநியோகிக்க திட்டம்; விதைச் சான்றுத்துறை இயக்குநர் தகவல்

ஆர்.டி.சிவசங்கர்

இந்தாண்டு 57 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் 1 லட்சத்து 10 ஆயிரம் மெட்ரிக் டன் தர சான்று பெற்ற விதைகள் விவசாயிகளுக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது என விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று துறை இயக்குநர் மு.சுப்பையா தெரிவித்தார்.

விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று துறை இயக்குநர் மு.சுப்பையா இன்று (செப். 8) நீலகிரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

நீலகிரி மாவட்ட உதகையில் உள்ள விதை பரிசோதனை நிலையத்தை ஆய்வு செய்த பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"எங்கள் துறை மூலம் விவசாயிகளுக்குத் தரமான விதைகள் கண்டறிந்து சான்றளிக்கப்படுகிறது.

இந்தாண்டு 57 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் 1 லட்சத்து 10 ஆயிரம் மெட்ரிக் டன் தர சான்று பெற்ற நெல், சிறு தானியங்கள், காய்கறி, பருத்தி பயிர் விதைகள் விநியோக்க திட்டமிட்டுள்ளோம்.

தமிழகத்தில் 30 ஆயிரத்து 720 விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளோம். இந்திய விதை தர நிர்ணய சட்டத்தின் கீழ் விதைகள் சிப்பம் கட்டப்பட்டுள்ளதா, விவரங்கள் உள்ளனவா, காலாவதி தேதி அச்சிடப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யப்படுகிறது.

ஆய்வில், ஏதேனும் விதிகளுக்கு உட்பட்டு இல்லாமல் இருந்தால் விற்பனை நிலையங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, தரமற்ற விதைகள் விற்பனை தடை செய்யப்படும்.

தமிழகத்தில் 454 மாதிரிகள் தரம் குறைவானது என அறியப்பட்டு, நீதிமன்ற வழக்கு தொடர்ந்துள்ளோம். கோவை மாவட்டத்தில் 211 விதைகள் தடை செய்யப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் மாவட்டத்தில் 5,183 ஹெக்டேர் பரப்பளவில் காய்கறி உற்பத்தி செய்யப்படுகிறது.

'கோட்' (Growth Output Test) பரிசோதனை மூலம் விதைகள் முளைப்பு திறன், இன தூய்மை, மாசு காரணிகள் ஆய்வு செய்யப்பட்டு, விதைகளின் தரம் நிர்ணயிக்கப்படுகிறது.

மத்திய அரசு அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின்படி விற்பனை விதைகள் விலையை நிர்ணயம் செய்கிறது. விலை அதிகமாக உள்ளது என விவசாயிகள் புகார் அளித்ததால், பிடி பருத்தி விலை நிர்ணயிக்கப்பட்டது. தற்போது காய்கறி விதைகளுக்கு விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தரமற்ற விதைகள் விற்பனை செய்தால் கடை உரிமம் ரத்து செய்யப்பட்டு, விதைகள் பறிமுதல் செய்யப்படும். மேலும், வழக்கு தொடரப்படும். நீதிமன்ற தீர்ப்பின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

தரமில்லாத விதையை பயன்படுத்தி விவசாயிகள் பாதிக்கப்பட்டால், உறுதி செய்யப்பட்ட பின்னர் இழப்பீடு வாங்கி தரப்படும்.

நீலகிரி மாவட்டத்தில் கேரட் பிரதான பயிர். விதைகள் தரமானதாக இருக்க ஆய்வு மேற்கொள்ளும் வகையில், மாதிரிகள் எடுத்து நஞ்சநாடு அரசு பண்ணையில் வளர்த்து, குணாதிசயங்கள் இருக்கின்றனவா என ஆய்வு செய்கிறோம்.

நீலகிரி மாவட்டத்தை இயற்கை வேளாண்மை மாவட்டமாக அரசு அறிவிக்க உள்ளது. எங்கள் துறை சார்பில் விவசாயிகளை ஒருங்கிணைத்து இயற்கை வேளாண்மை செய்ய ஊக்குவித்து, அங்கக சான்றிதழ் அளிக்கிறோம்"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆய்வின் போது, விதைச்சான்று இணை இயக்குநர் அசீர் கனகராஜ், விதை ஆய்வு துணை இயக்குநர் வெங்கடாசலம், உதவி இயக்குநர் சை.நர்கீஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT