தமிழ்நாடு அரசு பணியிடங்களில் வெளி மாநிலத்தவரை அனுமதிக்கும் வகையில் டிஎன்பிஎஸ்சி விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் வலியுறுத்தியுள்ளார்.
திருச்சியில் இன்று (செப். 8) செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
"தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள் ஆகியவற்றில் திட்டமிட்டே மத்திய அரசு இந்தி பேசுவோரை வேலையில் சேர்க்கிறது.
திருச்சி பொன்மலை பணிமனையில் அண்மையில் நியமனம் செய்யப்பட்ட 541 பேரில் 400-க்கும் அதிகமானோர் வெளி மாநிலத்தவர். மண்ணின் மக்களான தமிழர்கள் மிக சொற்ப எண்ணிக்கையிலேயே நியமனம் செய்யப்பட்டனர். ரயில்வே துறையில் வெளி மாநிலத்தவரை பணியமர்த்துவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு மாநில அரசு துணையாக இருப்பதைக் கண்டிக்கிறோம்.
எனவே, தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் மண்ணின் மக்களான தமிழர்களுக்கு 90 சதவீதம் வாய்ப்பு அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் தற்போது 10 சதவீதத்துக்கு அதிகமாக உள்ள வெளி மாநிலத்தவரை வெளியேற்ற வேண்டும். தனியார் துறை வேலைவாய்ப்புகளில் 90 சதவீதத்தை தமிழர்களுக்கே வழங்க வேண்டும். கர்நாடகம், குஜராத், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், இமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மண்ணின் மக்களுக்கு வேலையில் முன்னுரிமை அளிப்பதற்கான சட்டங்கள் இருப்பதைப்போல், தமிழ்நாட்டிலும் சட்டம் இயற்ற வேண்டும்.
தமிழ்நாட்டில் மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிப்பதற்கான சட்டம் இல்லை என்ற நிலையில், மாநில அரசுத் துறையில் வேலை அளிக்கும் டிஎன்பிஎஸ்சி விதிகளில் 2016-ல் திருத்தம் செய்யப்பட்டது.
இதன்படி, தமிழ் எழுத - படிக்க தெரியாத வெளி மாநிலத்தவர் பணியில் சேரலாம் என்றும், வேலைக்குச் சேர்ந்த பிறகு 2 ஆண்டுகளில் அவர்கள் தமிழ் கற்றுக் கொண்டால் போதும்.
தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் இந்த திருத்தத்தை முன்மொழிந்தவர் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். எனவே, தமிழ்நாடு அரசு பணியிடங்களில் வெளி மாநிலத்தவரை அனுமதிக்கும் வகையில் திருத்தப்பட்ட விதிகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
பொன்மலை பணிமனையில் கரோனா காலத்தில் வேலைக்கு சேர்க்கப்பட்டவர்களில் தமிழர் அல்லாதவர்களில் 10 சதவீதத்துக்கு அதிகமாக உள்ள பிற மாநிலத்தவர்களின் நியமனங்களை ரத்து செய்ய வேண்டும். இதன்மூலம் காலியாகும் அந்த இடங்களுக்கு தமிழ்நாட்டில் இருந்து தேர்வெழுதி தேர்வாகாமல் உள்ளவர்களை நியமனம் செய்ய வேண்டும்.
அமைப்புசாரா தொழிலாளர் வேலை வழங்கு வாரியத்தை ஏற்படுத்தி, அதில் வெளியூரிலிருந்து ஊர் திரும்பிய தமிழர்களை வேலை வாரியாக பதிவு செய்து, வேலைக்கு ஆள் கேட்கும் நிறுவனங்களுக்கு அனுப்பும் பணியை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் வேலையின்மை பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும். வேலை ஆள் கிடைக்கவில்லை என்ற பிரச்சினையும் தீரும்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி பொன்மலை பணிமனை முன் செப்.11-ம் தேதி முதல் செப்.18-ம் தேதி வரை தொடர்ந்து 7 நாட்களுக்கு மறியல் போராட்டம் நடத்தப்படவுள்ளது. இந்தப் போராட்டத்தில் கட்சி சார்பற்று அனைத்துத் தரப்பு மக்களும் கலந்து கொள்ள வேண்டும்"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பின்போது தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் கவித்துவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.