தமிழகம்

குற்றாலம் அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துத் திருட முயன்ற இளைஞர் 4 மணி நேரத்தில் கைது 

த.அசோக் குமார்

குற்றாலம் அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துத் திருட முயன்ற இளைஞர், கண்காணிப்புக் கேமரா உதவியால் 4 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம், குற்றாலம் அருகே உள்ள இலஞ்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏடிஎம் மையம் உள்ளது. இன்று (செப்.8) அதிகாலை 1 மணியளவில் இந்த மையத்துக்குள் மர்ம நபர் புகுந்துள்ளார். பணத்தைத் திருடுவதற்காக ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்றுள்ளார். ஆனால், இயந்திரத்தை உடைக்க முடியாததால், ஏமாற்றத்துடன் அங்கிருந்து சென்றுள்ளார்.

இதுகுறித்துத் தகவல் அறிந்த குற்றாலம் போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஏடிஎம் மையத்தில் உள்ள கண்காணிப்புக் கேமராவை ஆய்வு செய்தபோது, இயந்திரத்தை உடைத்துப் பணத்தைத் திருட முயன்றவர் இலஞ்சியைச் சேர்ந்த முத்து (19) என்பது தெரியவந்தது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், முத்துவைக் கைது செய்தனர்.

சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணையைத் தொடங்கிய போலீஸார், ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்ற முத்துவை 4 மணி நேரத்துக்குள் கைது செய்ததை அடுத்து, உடனடி நடவடிக்கைக்காகக் காவல்துறைக்குப் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT