தமிழகம்

ரூ.17 கோடி நகை கொள்ளையடித்த இளைஞர் சிக்கினார்: கொள்ளை பணத்தில் 50 ஏக்கர் நிலம் வாங்கியது அம்பலம்

செய்திப்பிரிவு

பண்ருட்டியில் 4 ஆண்டுகளுக்கு முன்பு அடகுக்கடை உரிமை யாளரைக் கொலை செய்து, ரூ.17 கோடி மதிப்பிலான நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில் 4 ஆண்டுகள் கழித்து இளைஞர் ஒருவர் சிக்கினார்.

பண்ருட்டியில் அடகுக்கடை நடத்தி வந்த சண்முகம் செட்டியார் கடந்த 2011 மே 17-ம் தேதி கொல்லப்பட்டார். மேலும் அவரது அடகுக் கடையில் இருந்து ரூ.17 கோடி மதிப்பிலான 80 கிலோ தங்கம், 1 கிலோ வெள்ளி என நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில் கடந்த ஆக.17-ம் தேதி வேலூர் நகைக் கடையில் சந்தேகத்துக்கு இடமான வகையில் இளைஞர் ஒருவர் நகைகளை விற்பனை செய்ய வந்தது போலீஸாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து போலீஸார் அங்கு சென்று அந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தபோது அவர் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த பெருமாள்(35) என்ற அருண் என்பதும் இவர் மீது தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு கொலை, கொள்ளை உள்ளிட்ட 25 வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் பண்ருட்டி அடகுக் கடை கொள்ளை சம்பவத்திலும் பெருமாளுக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து பெருமாளை செப்.3 முதல் 9-ம் தேதி வரை சிபிசிஐடி போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தனர். இதில் கொள்ளையடித்த நகைகளை பயன்படுத்தி பெங்களூருவில் 50 ஏக்கர் நிலம் வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

SCROLL FOR NEXT