தமிழகம்

பக்தர்களின் பங்கேற்பு இல்லாமல் வேளாங்கண்ணியில் பெரிய தேர் பவனி

செய்திப்பிரிவு

பக்தர்களின் பங்கேற்பு இல்லாமல் வேளாங்கண்ணியில் மாதா பேராலய பெரிய தேர் பவனி நேற்று நடைபெற்றது.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக, நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் கடந்த ஆக.29-ம் தேதி பக்தர்களின் பங்கேற்பின்றி கொடியேற்றத்துடன் ஆண்டுப் பெருவிழா தொடங்கியது. கடந்த செப்.1-ம் தேதி முதல் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வழிபாட்டுத் தலங்கள் அனைத்தையும் திறக்க அரசு அனுமதி அளித்த நிலையிலும், வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழாவில் வெளி மாவட்ட, வெளி மாநில பக்தர்கள் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டது.

வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வருவதைக் கண்காணிப்பதற்காக 21 இடங்களில் சோதனைச்சாவடி அமைத்து போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாதாவின் பிறந்த நாளான நேற்று இரவு பெரிய தேர் பவனி பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது. புனித ஆரோக்கிய மாதா பெரிய தேரில் எழுந்தருள, பெரிய தேருக்கு முன்னால் 6 சிறிய சப்பரங்களில் மிக்கேல், சம்மனசு, செபஸ்தியார், அந்தோனியார், சூசையப்பர், உத்திரிய மாதா ஆகியோர் எழுந்தருளினர். அதைத்தொடர்ந்து, பெரிய தேர் பேராலயத்தை சுற்றி பவனி வந்தது.

வழக்கமாக பெரிய தேர் பவனி நடைபெறும்போது, பேராலய வளாகத்தில் கூடியிருக்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘மாதாவே வாழ்க’, ‘அன்னை மரியே வாழ்க’ என பக்திப் பரவசத்துடன் முழக்கமிடுவார்கள். ஆனால், நேற்று அதுபோன்ற முழக்கங்கள் ஏதுமின்றி தேர் பவனி அமைதியாக நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் தலைமையில் போலீஸார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இன்று (செப்.8) மாலை திருக்கொடி இறக்கப்பட்டு ஆண்டுப் பெருவிழா நிறைவடைய உள்ளது.

SCROLL FOR NEXT