திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.7.24 கோடி மதிப்பிலான முடிவடைந்த 21 திட்டப் பணிகளை முதல்வர் பழனிசாமி திறந்துவைத்தார். மேலும் ரூ.14.94 கோடி மதிப்பிலான 12 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். உடன் ஊரக தொழில் துறை அமைச்சர் பா.பெஞ்சமின், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், ஆட்சியர் மகேஸ்வரி, எம்எல்ஏக்கள் பலராமன், நரசிம்மன், விஜயகுமார், அலெக்சாண்டர் உள்ளிட்டோர். 
தமிழகம்

நிபுணர் குழு பரிந்துரைப்படி தமிழக நிதி நெருக்கடியை சமாளிக்க நடவடிக்கை: திருவள்ளூரில் முதல்வர் பழனிசாமி தகவல்

செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் கரோனா தடுப்புப் பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்துக்கு முன்பாக, முதல்வர் பழனிசாமி ரூ.14 கோடியே 94 லட்சத்து 4 ஆயிரம் மதிப்பிலான 12 கட்டிடப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.7 கோடியே 23லட்சத்து 85 ஆயிரம் மதிப்பிலான 21 கட்டிடம் மற்றும் பூங்காக்களை திறந்து வைத்தார். ரூ.51 கோடியே 68 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பிலான இலவசவீட்டுமனைப் பட்டா, விபத்துநிவாரண நிதி உதவி உள்ளிட்ட
நலத்திட்ட உதவிகளை 7,528 பேருக்கு வழங்குவதன் அடையாளமாக 7 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ஆய்வுக் கூட்டத்துக்கு பிறகு, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினருடன் கலந்தாய்வு செய்தார்.

ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் முதல்வர் தெரிவித்ததாவது:

திருவள்ளூர் மாவட்டதில் ஆரம்பத்தில் அதிகமாக இருந்த கரோனா தொற்று, தற்போது அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது. கண்ணன் கோட்டை நீர்த்தேக்கம் அமைக்கும் பணி ஓரிரு மாதங்களில் நிறைவுபெற்று, தண்ணீர்முழுமையாக தேக்கி வைக்கப்பட்டு, சென்னை குடிநீருக்கு வழங்கப்படும்.

கூவம் ஆற்றின் குறுக்கே பழுதடைந்த கொரட்டூர் அணைக்கட்டு ரூ.32.45 கோடி மதிப்பில் மறுகட்டுமானம் செய்யும் பணி தொடங்கப்பட உள்ளது. கூவம், கொசஸ்தலை, குசா ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் அமைக்கும் திட்டங்கள் பரிசீலனையில் உள்ளன. திருவள்ளூர் புறவழிச்சாலை அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி மற்றும் நிலம் கையகப்படுத்து
வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

கும்மிடிப்பூண்டி அருகே மாநெல்லூர் கிராமத்தில் 4 ஆயிரம் ஏக்கரில் மின் வாகனம் உற்பத்தி பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதனால், 5 ஆயிரம்பேர் வேலை வாய்ப்பை பெறுவர். மத்திய அரசின் கிஷான் திட்டத்தை சிலர் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர். இதுகுறித்து, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

கரோனா காலத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க, முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரங்கராஜன் தலைமையிலான தமிழக பொருளாதார மேம்பாடு ஆலோசனைக்கு குழு அளித்த பரிந்துரைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வுகளில், மாவட்டஆட்சியர் மகேஸ்வரி, காஞ்சிபுரம் சரக டிஐஜி சாமுண்டீஸ்வரி, ஊரகத் தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன், எம்எல்ஏக்களான பலராமன், நரசிம்மன், விஜயகுமார், அலெக்சாண்டர், முன்னாள் அமைச்சர்களான பி.வி.ரமணா, மாதவரம் மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT