‘கத்தி’ பட திரைக்கதை பிரச்சினை தொடர்பான வழக்கில் நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட 7 பேர், அக்டோபர் 15-ம் தேதி தஞ்சை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தஞ்சாவூரில் அன்பு.ராஜசேகர் என்பவர் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகில் உள்ள இளங்காடு கிராமத்தைச் சேர்ந்த நான், ‘தாகபூமி’ என்ற குறும்படத்தை இயக்கினேன். பின்னர் அதை, திரைப்படமாக வெளியிட இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸுக்கு அதன் கதையை அனுப்பினேன்.
இந்நிலையில், அதே கதைக் கருவை மையமாக வைத்து ‘கத்தி’ என்ற பெயரில் திரைப்படமாக வெளியிட்ட முருகதாஸ், தயாரிப்பாளர்கள் கருணாகரன், சுபாஷ்கரன், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி. வில்லியம்ஸ், நடிகர் விஜய் ஆகியோர் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் 2014, டிச. 22-ம் தேதி உரிமையியல் வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இப்போது, இதே பிரச்சினைக்காக தஞ்சாவூர் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஜூன் 4-ல் குற்றவியல் வழக்கு தொடர்ந்துள்ளேன்.
வழக்கை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், பட நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நீலகண்ட நாராயணபூர், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், தயாரிப்பாளர்கள் கருணாகரன், சுபாஷ்கரன், ஒளிப் பதிவாளர் ஜார்ஜ் சி. வில்லி யம்ஸ், நடிகர் விஜய் உள்ளிட்ட 7 பேரும், அக்டோபர் 15-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என செப்டம்பர் 3-ம் தேதி உத்தரவிட்டுள்ளது என்றார்.