கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த மாதம் புத்தாக்க அறிவியல் கண்காட்சி நடந்தது. இதில் பர்கூர் ஒன்றியம் நல்லப்பநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர் மெய்யரசு தனது படைப்பை காட்சிபடுத்தியிருந்தார். சூரிய ஆற்றல் மூலம் இயங்கும் தானியங்கி நீர்பாசன கருவியை காட்சிக்கு வைத்து செயல்படும் விதம் குறித்து விளக்கினார்.
இவரது கண்டுபிடிப்பிற்கு மாவட்ட அளவில் முதல் பரிசு வழங்கப்பட்டது. இதையடுத்து திருச்செங்கோட்டில் நடந்த மாநில அளவிலான புத்தாக்க அறிவியல் கண்காட்சியில் தங்க பதக்கமும் பெற்றார். இந்நிலையில் வருகிற அக்டோபர் மாதம் 26 மற்றும் 27-ம் தேதிகளில் புதுடெல்லியில் அகில இந்திய அளவில் நடைபெறும் புத்தாக்க அறிவியல் கண்காட்சியில் மாணவர் மெய்யரசு பங்கேற்கவுள்ளார்.
தனது கண்டுபிடிப்பு குறித்து மாணவர் கூறியதாவது:
இன்றைய சூழலில் வேளாண்மை ஒரு பெரும் சவாலாக உள்ளது. காடுகளை அழித்தல், புவி வெப்பமாதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் போதிய மழையும் கிடைப்பதில்லை. எனவே, விவசாயிகளின் பளுவை குறைக்கவும், மாடித் தோட்டத்தை மேம்படுத்தவும், நீரை வீணாக்காமல் சேமிக்கவும், சூரிய ஆற்றலை கொண்டு இயங்கும் தானியங்கி நீர்பாசன அமைப்பு அவசியமானதாக உள்ளது.
இந்த வடிவமைப்பை பயன்படுத்தி விவசாய நிலங்களில் நீர் இல்லாத போது, தானாகவே நீர் பாய்ச்ச முடியும். நிலம் ஈரப்பதத்தை அடைந்தவுடன் சென்சார் கொடுக்கும் தகவலின் பேரில் மோட்டார் தானாகவே நின்றுவிடும். இதனால் விவசாயிகள் இல்லாமலேயே விளை நிலங்களில் முறையான நீர் பாய்ச்சுதல் நடைபெறும்.
அதிக உரம் போடுவதையும் தவிர்க்கலாம். விளை நிலத்தில் எப்போதும் ஈரப்பதம் இருந்து கொண்டே இருப்பதால் அதிக விளைச்சல் கிடைக்கும். சூரிய ஆற்றல் மூலம் இயங்குவதால் மின்வெட்டு பற்றி கவலை இல்லை. மின்சாரத்தையும் மிச்சப்படுத்தலாம், என்றார்.
அகில இந்திய அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க உள்ள மாணவர் மெய்யரசு மற்றும் வழிகாட்டி ஆசிரியர்களை மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் பாராட்டி, தேசிய அளவில் வெற்றி பெற வாழ்த்தினார். இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் கிருஷ்டி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தமிழரசு, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சின்னராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.