மதுரை மாநகர் சுப்பிரமணியபுரம் காவல் சரகம் டிவிஎஸ் நகரில் கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி திமுகவைச் சேர்ந்த சுரேஷ் பாபு என்ற பொட்டு சுரேஷ் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதன்பேரில், வழக்கு பதியப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். எனினும் இந்த வழக்கில் பாண்டி என்ற அட்டாக் பாண்டி தலைமறைவாக இருந்தார். அவரை தேடப்படும் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்ததுடன், 7 பிடியாணைகளும் நிலுவையில் உள்ளன.
திட்டமிட்ட குற்றத்தடுப்பு நுண்ணறிவுப் பிரிவின் ஒரு குழு அட்டாக் பாண்டியின் நடமாட்டங்களை கண்காணித்து வந்தது. கடந்த 21-ம் தேதி மும்பையின் புறநகர் பகுதியில் அட்டாக் பாண்டி கைது செய்யப்பட்டார். தலைமறைவு குற்றவாளியை கண்டுபிடிக்க சிறப்பாக செயல்பட்ட தமிழக காவல்துறையின் பணி பாராட்டுக்குரியது என முதல்வர் தனது பதிலுரையில் தெரிவித்தார்.