மதுரை காவல்துறையில் கரோனாவால் 2-வது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகிலுள்ள பெரிய செம்மேட்டுபட்டியைச் சொந்த ஊராக கொண்டவர் மலர்சாமி(56). சிறப்பு காவல் உதவி ஆய்வாளரான இவர், திருப்பரங்குன்றம் போக்குவரத்து பிரிவில் பணிபுரிந்தார்.
இருப்பினும், தற்போது மாற்றுப்பணியாக மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்தார். திருப்பரங்குன்றம் கூடல்மலை தெருவில் குடும்பத்தினருடன் வசித்தார்.
அவருக்கு உடல்நிலை பாதித்த நிலையில், கடந்த மாதம் 19-ம் தேதி கரோனா பரிசோதனை செய்தார். 25-ம் தேதி அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து மதுரை அரசு கரோனா மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சையில் இருந்தார். ஆனாலும், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அதிகாலை 4 மணிக்கு உயிரிழந்தார். மலர் சாமிக்கு வசந்தி என்ற மனைவி, அருண்குமார் (34), விக்னேஷ் குமார் (29) ஆகிய இரு மகன்களும் உள்ளனர்.
அவரது உடல் 21 குண்டுகள் முழங்க தத்தநேரி மின் மயானத்தில் நேற்று தகனம் செய்யப்பட்டது. மதுரை காவல்துறையில் கரோனாவால் உயிரிழந்த 2வது நபர் என்பது குறிப்பிடத்தக்கது.