பி.எம்.கிசான் திட்டத்தில் நடைபெற்றுள்ள ஊழலுக்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு முதல் பி.எம்.கிசான் திட்டம் என்ற பெயரில் ஒவ்வொரு விவசாயக் குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6000 ரூபாயை 3 தவணைகளாக வழங்கும் சிறப்புத் திட்டத்தை அறிவித்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 1.25 கோடி குடும்பங்கள் விவசாயப் பணிகளில் முழுமையாக ஈடுபட்டு வரும் நிலையில், கடந்த 2019-ம் ஆண்டில் தமிழக வேளாண்துறை மூலமாக முதற்கட்டமாக 25 லட்சம் குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டு வங்கிகள் மூலம் நிதி வழங்கப்பட்டது.
மாநில அரசுகள் திட்டமிட்டுக் கால தாமதம் செய்வதாக நினைத்த மத்திய அரசு, நாம் தான் இதற்கு நிதி கொடுக்கிறோம் என்பதை விவசாயிகளுக்கு உணர்த்தும் வகையில் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியாக விவசாயிகளே தனியார் இணையதள நிறுவனம் மூலம் பதிவு செய்துகொள்ள அனுமதி வழங்கியது. இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட வேளாண் உதவி அலுவலர்கள் மற்றும் இடைத் தரகர்கள் விவசாயி என்றப் பெயரில் போலி நபர்களைப் பதிவேற்றம் செய்து ஊழல் செய்திருக்கிறார்கள். இதன் விளைவு பயனாளிகள் எண்ணிக்கை 40 லட்சமாக உயர்ந்துள்ளது.
மத்திய அரசால் ஒதுக்கப்படும் நிதியாக இருந்தாலும் அறிவிக்கப்படும் திட்டங்களாக இருந்தாலும் கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் மாநில அரசுகள்தான் அவற்றை நேரடியாக மக்களுக்குக்கொண்டு செல்லும். ஆனால், இப்படிச் செய்வதால் தங்களுக்கு மக்களிடம் செல்வாக்குக் குறைவதாக நினைத்து அரசியல் ஆதாயத்திற்காக இணையதளம் மூலம் மக்களிடம் நேரடியாக கொண்டு சேர்க்க மத்திய அரசு எடுத்த முயற்சி மிகப்பெரும் ஊழலாக மாறிவிட்டது. இதற்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும்.
கிசான் கிரெடிட் கார்டு உள்ளவர்கள் மட்டுமே வேளாண் திட்டங்களின் பயனைப் பெற முடியும் என இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே மத்திய அரசு அறிவித்தது. ஆனால், தமிழ்நாட்டில் 1984-க்கு பிறகு நில உடமைப் பதிவேடுகள் மறு வகைப்பாடு செய்து இன்றைய நிலைக்கு ஏற்ப இணையத்தில் பதிவேற்றம் செய்யப் படாததால் 60 சதவீத விவசாயக் குடும்பங்கள் பயன்பெற முடியாத நிலையில் கிசான் கிரெடிட் கார்டு வழங்க இயலவில்லை. இதனால் விவசாயிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியில் 50 சதவீதம் ஊழல் முறைகேட்டில் முடிந்து விடுகிறது.
எனவே, தமிழக அரசு உடனடியாக நில உடமைப் பதிவேடுகளை மறு வகைப்பாடு செய்து விவசாயத்தில் ஈடுபடும் அனைவருக்கும் உடனடியாக ஆதார் கார்டுக்கு இணையான கிசான் கிரடிட் கார்டுகளை வேளாண் துறை மூலம் வழங்க வேண்டும். அவற்றின் மூலம் மட்டுமே கடன் உள்ளிட்ட அனைத்துச் சலுகைகளும் ஊழல் முறைகேடின்றி சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும். அதுவரையில் வருவாய்த் துறைச் சான்றுகளைப் பெற்று பழைய நடைமுறையில் பயனாளிகள் தேர்வை மாநில அரசுத் துறை மூலம் தொடர மத்திய - மாநில அரசுகள் முன்வர வேண்டும்.”
இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.