தூத்துக்குடியில் மக்கள் மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்பிவிட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு இன்று மனு கொடுக்க ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊரடங்கு தளர்வு அமல்படுத்தப்பட்டதால் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தை வழக்கம் போல் ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் எந்த குறைதீர் நாள் கூட்டங்களும் நடத்தப்படவில்லை. ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து கடந்த சில வாரங்களாக பல்வேறு பகுதி மக்கள் ஆட்சியர் அலுவலகத்துக்கு கோரிக்கை மனுக்களை அளிக்க வரத் தொடங்கினர். இந்நிலையில் இன்று ஏராளமானோர் மனு அளிக்க அணி அணியாக குவிந்ததால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மீண்டும் குறைதீர் நாள் கூட்டம்:
சமூக ஆர்வலர் சுப்பிரமணியன் தலைமையில் பெண்கள் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில், தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்று வந்தது. கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனை மீண்டும் வழக்கம் போல் நடத்த வேண்டும் என, அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பேத்கர் சிலை:
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தெற்கு மாவட்ட அமைப்பாளர் முரசு தமிழப்பன் தலைமையில் நேற்று ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு: 32 ஆண்டு கால கோரிக்கையை ஏற்று திருச்செந்தூர் அம்பேத்கர் நினைவு பூங்காவில் அம்பேத்கர் முழுவுருவ வெண்கல சிலை அமைக்க வேண்டும். இதனை வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்தவும், 2021 சட்டப்பரவை தேர்தலை புறக்கணிக்கவும் முடிவு செய்துள்ளோம். எனவே அம்பேத்கர் சிலையை விரைவாக அமைக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெருவிளக்கு:
தமிழக வாழ்வுரிமை கட்சியின் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் மா.மாரிச்செல்வம் தலைமையில் அளித்த மனுவில், முத்தையாபுரம் பல்க் சந்திப்பு முதல் எம்.தங்கம்மாள் வரையிலும், சூசைநகர் முதல் டாக் தொழிற்சாலை வரையிலும் பெரும்பாலான தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, தெருவிளக்குகளை மாநகராட்சி நிர்வாகம் உடனே அமைக்க வேண்டும் என, அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் தமிழக வாழ்வுரிமை கட்சியின் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் வடக்கு மாவட்ட செயலாளர் என்.ஏ.கிதர் தலைமையில் அளித்த மனுவில்: கரோனா ஊரடங்கால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதனை உடனே திரும்ப பெற்று கேரளாவில் வசூலிப்பது போல மிகக்குறைந்த சுங்கக்கட்டணம் வசூலிக்க வேண்டும். மேலும், சாலைகளையும் முறையாக பராமரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமமுக மனு:
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர்கள் மாவட்ட செயலாளர் கே.ஆறுமுக பழனிச்செல்வம் தலைமையில் கறுப்புச் உடை அணிந்து வந்து அளித்த மனு: தமிழகத்தில் பட்டியல் சாதி பிரிவில் உள்ள குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், வாதிரியார், தேவேந்திர குலத்தான் ஆகிய 7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அழைத்திடவும், சான்றிதழ் பெறவும் தமிழக அரசு அரசாணை பிறப்பிக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீர் மறியல்:
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்தவர்கள் அதன் தலைவர் கே.என்.இசக்கிராஜா தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு தூத்துக்குடி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை மனு அளிக்க ஆட்சியர் அலுவலகம் அழைத்து சென்றனர்.
ஆட்சியர் அலுவலகத்தில் அவர்கள் அளித்த மனுவில், தென்மாவட்டங்களில் தேவர் சமுதாயத்தினர் மீது தொடர்ந்து பொய் வழக்கு போடுவதை உடனே நிறுத்த வேண்டும். பிசிஆர் சட்டத்தை உடனே ரத்து தெய்ய வேண்டும். தென்மாவட்டங்களில் குறிப்பாக சாத்தான்குளம், செய்துங்கநல்லூர், நாசரேத் காவல் நிலையங்களில் சாதி ரீதியாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சி:
நாம் தமிழர் கட்சியின் ஓட்டப்பிடாரம் தொகுதி செயலாள் முத்துகிருஷ்ணன் தலைமையில் அளித்த மனு விபரம்: தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசன், பொட்டல்காடு கிராமங்களில் உள்ள விளைநிலங்கள், குடியிருப்பு பகுதி வழியாக இயற்கை எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். மக்கள் பாதிக்காத வகையில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக மாற்றுப்பாதையில் குழாய் பதிக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் மனு:
கோவில்பட்டி பாண்டவர்மங்கம் சண்முகசிகாமணி நகரை சேர்ந்த மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்கள் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில், கரோனா ஊரடங்கு காலத்திலும், தனியார் நிதி நிறுவனங்கள் கடன் தவணை மற்றும் வட்டி கேட்டு எங்களை கொடுமைப்படுத்துகின்றனர். இது தொடர்பாக ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.