தூத்துக்குடி ராஜாஜி பூங்கா சுமார் 5 மாதங்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டதை தொடர்ந்து உற்சாகமாக நடைபயிற்சி மேற்கொண்ட மக்கள். படம்: என்.ராஜேஷ் 
தமிழகம்

தூத்துக்குடியில் 5 மாதங்களுக்கு பிறகு பூங்காக்கள் திறப்பு: மக்கள் உற்சாகமாக நடைப்பயிற்சி

ரெ.ஜாய்சன்

தூத்துக்குடியில் கரோனா ஊரடங்கால் கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டிருந்த பூங்காக்கள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. இதையடுத்து பொதுமக்கள் பூங்காக்களில் உற்சாகமாக நடைபயிற்சி மேற்கொண்டனர்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் கூடும் இடங்கள் அனைத்தும் கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டிருந்தன.

தற்போது கரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. நேற்று முதல் மேலும் சில தளர்வுகள் அமலுக்கு வந்தன. அதன்படி 5 மாதங்களுக்கு பிறகு பூங்காக்கள் இன்று திறக்கப்பட்டன.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள ராஜாஜி பூங்கா, கக்கன் பூங்கா, சங்கரநாராயணன் பூங்கா உள்ளிட்ட பெரிய பூங்காக்கள் அனைத்தும் நேற்று காலை 6 மணி முதல் திறக்கப்பட்டன.

இதேநேரத்தில் எம்ஜிஆர் பூங்கா இன்று திறக்கப்படவில்லை. சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவு பெறும் இந்த பூங்காவை தமிழக முதல்வர் தூத்துக்குடி வரும் போது திறந்து வைக்கவுள்ளார்.

இதனால் இந்த பூங்கா திறக்கப்படவில்லை. இதேபோல் முத்துநகர் பூங்கா, ரோச் பூங்கா, புதிய துறைமுக கடற்கரை பூங்கா போன்ற கடற்ரை பூங்காக்களை திறக்க அரசு அனுமதி அளிக்காததால் அவைகள் திறக்கப்படவில்லை.

மாநகரில் உள்ள முக்கிய பூங்காக்கள் திறக்கப்பட்டதால் காலையே நடைபயிற்சி செய்வோர் பூங்காக்களுக்கு வந்து உற்சாகமாக நடைபயிற்சி மேற்கொண்டனர். மேலும், மாலை நேரத்திலும் பலர் பூங்காக்களில் உற்சாகமாக நடைபயிற்சி மேற்கொண்டனர்.

மேலும், பூங்காக்களுக்கு வரும் அனைவரும் கண்டிப்பாக முக்கவசம் அணிய வேண்டும். கூட்டமாக நடைப்பயிற்சி செய்யக் கூடாது. விளையாட்டு உபகரணங்கள், கழிப்பறைகளை பயன்படுத்தக்கூடாது.

60 வயதுக்கு மேற்பட்டோர், 10 வயதுக்கு உட்பட்டோருக்கு அனுமதி கிடையாது என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மாநகராட்சி அலுவலர்கள் கண்காணித்தனர்.

SCROLL FOR NEXT