மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை அமெரிக்க துணை தூதர் சந்திக்க மறுத்ததற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: ''இலங்கையில் ராஜபக்சே ஆட்சி காலத்தில் நடைபெற்ற போர்குற்றங்கள் குறித்து சார்பற்ற, நடுநிலையோடு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், போர்குற்ற விசாரணையை இலங்கை அரசே மேற்கொள்ளலாம் என அமெரிக்கா கூறியுள்ளது. இதை கண்டித்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனையொட்டி அமெரிக்கா நாட்டின் துணைத் தூதரை சந்தித்து தமிழகத்தின் கருத்தை அமெரிக்க அரசுக்கு தெரிவிக்கும் விண்ணப்பம் அளிக்க சென்றுள்ளார்.
முன்னதாக வைகோவை சந்திக்க அனுமதி அளித்திருந்த துணைத் தூதர், வைகோவை சந்திக்கவும், மனுவை நேரில் பெறவும் மறுத்துள்ளார். தமிழர்களின் உணர்வுகளை, தமிழ் மண்ணிலிருந்து செயல்படும் அயல் தேச துணைத் தூதர் நிராகரித்திருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.