ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதால் வாடகை வாகனங்களுக்கு வரி, காப்பீடு செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரிய மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. வாடகை வாகன ஒட்டுநர் மற்றும் உரிமையாளர்களுக்கு அரசு சார்பில் எந்த உதவியும் கிடைக்கவில்லை. பொது முடக்கத்தால் 5 மாதங்களாக வாடகை வாகன ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர்.
வங்கிகள், நிதி நிறுவனங்களில் கடன் வாங்கி கார்களை வாங்கி ஓட்டி வந்தோம். பொது முடக்கத்தால் கடன் தவணை செலுத்த ரிசர்வ் வங்கி விலக்கு வழங்கியுள்ளது.
இருப்பினும் பல தனியார் நிதி நிறுவனங்கள் கடன் தவணையை கட்ட வலியுறுத்தி வருகின்றனர். தவணை கட்ட தவறும்பட்சத்தில் வாகனங்களை பறிமுதல் செய்கின்றனர்.
இது தவிர வாகனங்களுக்கு வரி, காப்பீடு, தகுதிச் சான்று பெற என பல வகையில் பெரும் தொகை செலவிட வேண்டியதுள்ளது. இதற்கு பணம் இல்லாததால் இதுவரை 50-க்கும் மேற்பட்ட வாடகை ஓட்டுநர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
எனவே, வாடகை வாகன ஓட்டுனர்கள், உரிமையாளர்களின் பரிதாப நிலையை கருத்தில் கொண்டு பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வாடகை கார்களுக்கான வரி, காப்பீடு பெறுவதில் விலக்கு அளிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு, மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.