தமிழகம்

குமரியில் கனமழையால் ஆறு, கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு; அணைகள் மூடப்பட்டன- நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால் அறுவடைப் பணி பாதிப்பு

எல்.மோகன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஆறு, கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் வீணாவதைத் தவிர்க்கும் வகையில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் அடைக்கப்பட்டன. நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால் அறுவடைப் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே தொடர்ந்து சாரல் மழை பெய்து வந்தது. இதுவே கடந்த இரு நாட்களாக கனமழையாக உருவெடுத்தது.

மழையால் மாவட்டம் முழுவதும் குளிரான தட்பவெப்பம் நிலவியதுடன் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குழித்துறை தாமிரபரணி ஆறு, நாகர்கோவில் பழையாறு, வள்ளியாறு, புத்தனாறு, மற்றும் ஆறு, கால்வாய்களில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகின்றன.

அதிகபட்சமாக ஆனைக்கிடங்கில் 92.2 மிமீ., மழை பெய்தது. இதைப்போல் நாகர்கோவில், மார்த்தாண்டம், குலசேகரம், திற்பரப்பு, தக்கலை, குளச்சல், களியக்காவிளை, கன்னியாகுமரி, திங்கள்நகர் என மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டியது. பேச்சிப்பாறையில் 90 மிமீ., பெருஞ்சாணியில் 71, பூதப்பாண்டியில் 22, சிற்றாறு ஒன்றில் 68, சிற்றாறு இரண்டில் 76, களியலில் 28, கன்னிமாரில் 30, குழித்துறையில் 81, கொட்டாரத்தில் 27, மைலாடியில் 38, நாகர்கோவிலில் 37, புத்தன்அணையில் 70, சுருளோட்டில் 59, தக்கலையில் 21, பாலமோரில் 56, இரணியலில் 22, மாம்பழத்துறையாறில் 78, கோழிப்போர்விளையில் 56, அடையாமடையில் 53, குருந்தன்கோட்டில் 40, முள்ளங்கினாவிளையில் 74, முக்கடல் அணையில் 24 மிமீ., மழை பெய்தது.

இரு மாதத்திற்கு பின்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். செண்பகராமன்புதூர் அகஸ்தியர் காலனியில் மழையால் வீடு இடிந்ததில் செங்கல்சூளை தொழிலாளி வள்ளுவர் செல்வன்(52) காயமடைந்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளன பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 907 கனஅடியும், பெருஞ்சாணிக்கு 672 கனஅடி தண்ணீரும், சிற்றாறு அணைகளுக்கு 175 கனஅடி தண்ணீரும் உள்வரத்தாக வருகின்றன.

ஏற்கெனவே மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தண்ணீரை தேக்கும் வகையில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகள் அடைக்கப்பட்டன. திற்பரப்பு அருவியில் மழையால் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னிப்பூ நெல் அறுவடை பணிகள் நடந்து வந்த நிலையில் கனமழையால் நாகர்கோவில் புத்தேரி, இறச்சகுளம், தெரிசனங்கோப்பு பகுதிகளில் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி அறுவடை செய்ய முடியாமல் விவசாயிள் தவித்து வருகின்றன.

SCROLL FOR NEXT