தேசிய கல்விக் கொள்கையை நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் விவாதிக்காமல், ஆளுநர்களிடமும், குடியரசுத் தலைவரிடமும் மத்திய அரசு கருத்துக் கேட்பது - தலைகீழான முறையாகும், என கி.வீரமணி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை:
புதிய கல்விக் கொள்கை என்ற கொள்கை முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அஜெண்டாவினை செயலாக்குகின்ற திட்டம்தான். அதனை உருவாக்கியபோது அதில் சிறந்த கல்வி நிபுணர் எவருமே இடம்பெறவில்லை. கல்வியாளர்கள் இல்லாத கல்விக் குழு முதலில் இதனை சமஸ்கிருதமயமாக்கிட கால்கோள் விழா நடத்தியவர் டி.ஆர்.எஸ்.சுப்பிரமணியம்.
அதன்மீது எழுந்த எதிர்ப்புக் குரலுக்குப்பின் அதனை ‘ரிப்பேர்’ செய்து அளிக்கும்போது மாற்றி அமைக்கப்பட்ட கல்விக் குழுவிலும் அணுசக்தித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற கஸ்தூரி ரங்கன் தலைவராக இருந்தார், அறிக்கை தந்தார்.
இதுபற்றி நாடாளுமன்றத்திலோ, நாட்டின் அனைத்து சட்டமன்றங்களிலோ விரிவான விவாதங்கள் நடைபெற்ற பிறகே - ஒப்புதல் கிடைத்த பிறகே - மத்திய அமைச்சரவை அதனை ஏற்பதுதான் சரியான ஜனநாயக முறையாகும், மக்களாட்சியின் மாண்பு என்பதும் அதுதான்.
ஆனால், நடந்ததும், நடப்பதும் என்ன? குதிரைக்கு முன்னால் வண்டியா? வண்டிக்கு முன்னால் குதிரையா? என்பதில், குதிரைக்கு முன்னால் வண்டி என்பது போன்ற ஒரு தலைகீழான முறையே - அதுவும் ‘ஒப்புக்குச் சப்பாணி’ என்று கூறுவதுபோல, நடைமுறைகள் அமைக்கப்பட்டுள்ளன!
அசல் ஜனநாயகக் கேலிக்கூத்தே
முதலில் மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டு, அதற்குப் பிறகு குடியரசுத் தலைவரிடமும்,, ஆளுநர்களை அழைத்தும் கருத்துக் கேட்பது என்றால், இதைவிட ஒரு ஜனநாயகக் கேலிக் கூத்து வேறு உண்டா?
தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுகவின் தலைவருமான ஸ்டாலின் சரியானபடி சுட்டிக்காட்டி தனது ஜனநாயக அரசியல் கடமையை ஆற்றிடும் வகையில் இதைத் தவறான அணுகுமுறை என்று சுட்டிக்காட்டியுள்ளது வரவேற்கத்தக்கது.
மத்திய அமைச்சரவையே ஒப்புக்கொண்ட பிறகு, ஆளுநர்களிடமும், குடியரசுத் தலைவரிடமும் கருத்துக் கேட்பு நடத்தி முடிவு செய்வது, சடங்கு அல்லது சம்பிரதாயம் போன்ற ஒரு ‘தமாஷ்’ அல்லாமல் வேறு என்ன?
ஆசிரியர்களிடம் கருத்துக் கேட்பு ஒரே வாரத்தில் என்ன? அதுவும் கரோனா கொடுங்காலத்தில்! இது கரோனாவைவிட கொடுமை அல்லவா? பல கோடி மாணவர்களின் இன்றைய காலகட்டம் மட்டுமல்ல, இனிவரும் கால சந்ததியினரின் வாழ்க்கையை முதன்மைப்படுத்தி கண்ணொளியைவிட முக்கியமாகக் கருதப்பட வேண்டிய கல்வியை இப்படியா அவசர கதியில் திணிப்பது?”
இவ்வாறு கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.